(க.பிரசன்னா)

பெருந்தோட்ட சேவையாளர்களையும் இந்திய வீட்டுத் திட்டத்துக்குள் இணைப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படும் அல்லது அமைச்சின் மூலமாக கட்டண அடிப்படையில் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்படுவர் எனவும் இவ்வீட்டுத்திட்டத்தில் சுயதொழில் வாய்ப்புக்கான திட்டமும் உள்ளடக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸின் நிர்வாகக்குழு கூட்டம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், 

பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸில் முன்பிருந்த செயற்றிறன் தற்போது இல்லை. பெருந்தோட்ட சேவையாளர்களுக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் வழங்கப்படுவதோடு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். காங்கிரஸ் குடும்பத்துக்குள்ள பிரச்சினை தொடர்பில் ஆராயமையே புதிதாக பல தொழிற்சங்கங்கள் உருவாகுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு மட்மே வீடு என்றில்லாமல், தோட்டத்தில் பிறந்த எல்லோருக்குமே வீடு என்ற கொள்கையே பின்பற்றப்படும். பெருந்தோட்ட சேவையாளர்களையும் இந்திய வீட்டுத் திட்டத்துக்குள் இணைப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படும் அல்லது அமைச்சின் மூலமாக கட்டண அடிப்படையில் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்படுவர். இவ்வீட்டுத்திட்டத்தில் சுயதொழில் வாய்ப்புக்கான செயற்றிட்டமும் உள்ளடக்கப்படும் எனத் தெரிவித்தார்.