(எம்.ஆர்.எம்.வஸீம்)
நாட்டில் பின்தங்கிய பிரதேசம் மற்றும் தோட்டபுறங்களில் பாரியளவில் மலசலகூடங்கள் பற்றாக்குறை இருந்து வருகின்றது. இவற்றுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்காதவரை நிலையான அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் பயன் இல்லை என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கையிக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிட பிரதிநிதி மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் வேலைத்திட்ட வதிவிட பிரதிநிதி ஆகியோர் நீர்வழங்கல் அமைச்சின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவை இன்று அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது அமைச்சர் அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நிலையான அபிவிருத்தி தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு இருக்கும் இலக்கு மற்றும் குறிக்கோள்களை வெற்றிகொள்வதில் உலகம் பூராகவும் பரவலாக செயற்படுத்தப்படும் வேலைத்திட்டத்தில் இலங்கை நல்ல நிலையில் இருந்தாலும், முன்னுக்கு செல்ல இலங்கைக்கும் இன்னும் அதிக தூரம் இருக்கின்றது. எமது நாட்டில் மலசலகூட வசதி இல்லாதவர்கள் பாரியளவில் இருக்கின்றனர். அவர்கள் வேறுநாட்டு மக்கள் போன்று வெட்டவெளி இடங்களில் இயற்கை கடமைகளை நிறைவேற்ற விரும்புவதில்லை. அவர்களுக்கு மலசலகூடம் அத்தியாவசியமானதாகும்.

விசேடமாக தோட்டப்புறங்கள் மற்றும் கிராம பிரதேசங்களில் ஒரு பிரதேச செயலகப்பிரிவில் 500க்கும் அதிகமானவர்களுக்கு தற்காலிகமாகவேனும் மலசலகூடம் இல்லாமல் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலைமை எல்லாேரையும் பாதிக்கும் விடயமாகும். ஏனெனில்  அவர்கள் தங்களது இயற்கை கடமைகளை முறையான சுகாதார பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளாவிட்டால், அவை நீருடன் கலந்துவிடுவதால் நீர் நிலைகள் மாசுபடுகின்றன. இது எமக்கு பாரிய அச்சுறுத்தலாகும். அவர்களுக்கு மலசலகூடம் இல்லாமல் இருப்பது அவர்களுக்கு மாத்திரமான பிரச்சினையல்ல. முழு நாட்டு மக்களும் முகம்கொடுக்க வேண்டியேற்படும் பயங்கரமான நிலையாகும்.

அதனால் ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலலிலை நிதியம், காலநிலை மாற்றத்தினால் நாடுகளுக்கு முகம்கொடுக்கு நேரிடும் சவால்களுக்கு உதவுவதுபோல், இவ்வாறான அடிப்படை விடயங்கள் தொடர்பாகவும் கரிசணை கொள்ளவேண்டும். பாரியளவிலான மக்களுக்கு மலசலகூட வசதி இல்லாமல் நிலையான அவிருத்தியில் எந்த பயனும் இல்லை என்றார்.