உள்நாட்டில் அரசாங்கத் தொழில் வாய்புக்களையும் வெளிநாடுகளில் அதிக சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புக்களையும் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்து ஏமாற்றி வந்த நபரை தாம் கைது செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தார்.

அம்பாறை இறக்காமம் பகுதியைச் சேர்ந்த சுமார் 50 வயதுடைய நபரே இத்தகைய மோசடி தொடர்பாக இறக்காமத்தில் நடமாடித் திரிந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் அந்தப் பகுதியில் நடமாடுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து தமக்கும் ஒரு வேலைவாய்ப்பு பெற்றுத்தரவேண்டும் என பாசாங்கு செய்த புலனாய்வுப் பிரிவினரால் இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளின்போது அந்நபர் இவ்வாறு பலரிடம் உள்நாட்டில் அரச தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த விவரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இன்னும் பலரிடம் இச்சந்தேக நபர் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகவும் கூறி பணம் பெற்று ஏமாற்றியமை தெரியவந்துள்ளது.

மேலும் ஏற்கெனவே இந்நபருக்கெதிராக சுமார் 9 மோசடி வழக்குகள் உள்ளதாகவும் விவரங்கள் வெளியாகியுள்ளன.

சந்தேக நபருக்கெதிராக 15 பேர்  பொலிஸில் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.