திலீபனை நினைவு கூருவது இலங்கையில் சிங்கள – தமிழ் இன பதற்ற நிலையை அதிகரிக்கின்ற அதேவேளை, இந்தியாவுடனான இலங்கைத் தமிழர்களின் உறவுகளையும் கசப்பாக்கக்கூடும்.

-பி.கே. பாலச்சந்திரன்

உண்ணாவிரதமிருந்து மரணமடைந்த விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி திலீபனின் 33ஆவது நினைவு தினத்தை அனுஷ்டிப்பது இந்த வருடம் இலங்கை அரசியலில் ஒரு பிரச்சினையாக மாறியிருக்கிறது. இந்தப் பிரச்சினை சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான பிளவை மேலும் ஆழமாக்கும் சாத்தியத்தை கொண்டிருப்பதுடன் இந்தியாவுடனான தமிழர்களின் உறவுகளையும் கசப்பாக்கும் ஆபத்தைக் கொண்டிருக்கிறது. தற்பேதைய இலங்கை அரசாங்கத்தில் தங்களது நிலையை வலிதாக்கிக் கொண்டுள்ள சிங்கள தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை பாதுகாக்க உதவுமாறு இந்தியாவை தமிழர்கள் கேட்கின்ற சூழ்நிலையில் இந்தியாவுடனான தமிழர்களின் உறவுகள் கசப்படையுமானால் அது தமிழர்களுக்கு பாதகமாக அமையும்.

இலங்கை - இந்திய சமாதான  உடன்படிக்கைக்கு பிறகு 1987 செப்டெம்பரில் உண்ணாவிரதமிருந்து மரணமடைந்த திலீபனின் நினைவை அனுஷ்டித்தமைக்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்ட பிறகு தமிழ் - சிங்கள பிளவு மேலெழுந்திருக்கிறது. தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் ஒன்றின் எந்த உறுப்பினரையும் நினைவு கூர்ந்து கௌரவப்படுத்த முடியாது என்ற ரீதியில் திலீபன் நினைவு அனுஷ்டிப்புக்கு எதிராக யாழ் மாவட்ட பொலிஸார் நீதிமன்றம் ஒன்றில் உத்தரவை பெற்றிருந்தனர். கடந்த காலத்தில் அரசாங்கத்தினதும் நீதிமன்றத்தினதும் சம்மதத்துடன் நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றன என்ற பிரதிவாதிகள் தரப்பு வாதத்தை நிராகரித்து மஜிஸ்திரேட் பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்கி உத்தரவை பிறப்பித்தார். அந்த தடையையும் மீறி நினைவு நிகழ்வொன்றை நடத்தியபோது கைது செய்யப்பட்ட சிவாஜிலிங்கம் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஆனால், தமிழ் அரசியல் கட்சிகள் இதையொரு பிரச்சினையாக கிளப்பி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் சிங்கள தேசியவாத அரசாங்கத்துக்கு எதிராக தங்களை ஐக்கியப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்திருக்கும் நிலையில் இந்த நினைவு கூரல் விவகாரம் தணிந்து போக சாத்தியமில்லை.

தமிழர் விடுதலை போராட்டத்தின் தியாகிகளை நினைவு கூருவதற்கு புதிதாக விதிக்கப்பட்டிருக்கும் தடைகள் பற்றி ஆராய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமொன்றை நடத்துவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்தது. பொதுப் போராட்ட திட்டமொன்றை வகுப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் தங்களது தமிழ் அரசியல் எதிராளிகள் உட்பட சகல தமிழ் குழுக்களினதும் கூட்டமொன்றையும் கூட்டியிருந்தார். சிவாஜிலிங்கத்தின் கைதுக்கு ஊடகங்கள் கொடுத்த பிரபல்யம் நினைவு கூரும் விவகாரத்தை தமிழர் பிரச்சினையாக்கியிருக்கிறது. இடம்பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தால் ஒரு சிறு சர்ச்சை கூட விளைவிக்காமல் நடந்திருக்கக்கூடிய வழமையான வருடாந்த நிகழ்வு தடையினாலும் ஒரு தமிழ் மிதவாத தலைவரின் கைதினாலும் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தக்கூடிய ஒரு தேசிய பாதுகாப்பு பிரச்சினையாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சினை மேலும் விரிவடையுமானால், அரசாங்கம் எடுக்கக்கூடிய எதிர் நடவடிக்கையினால் பிரச்சினை மேலும் தீவிரமடைந்து இனப்பிளவை ஆழமாக்கும் என்று ஒரு மிதவாத தலைவர் அச்சம் தெரிவித்தார்.

அரசாங்க சார்பு தரப்பிலிருந்து முதல் தாக்குதலை சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இப்போது கௌரவ பேராசிரியராக இருக்கும் பயங்கரவாதம் தொடர்பான சர்வதேச நிபுணர் கலாநிதி ரொஹான் குணரட்ன தொடுத்தார். ‘பயங்கரவாதிகளை புகழ்ந்துரைப்பவர்கள் கைதுசெய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்த நாசகார பாதையில் மற்றவர்களும் பின்தொடர்வதை தடுப்பதற்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். புலம்பெயர் தமிழ் சமூகத்தின் மத்தியிலுள்ள விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புகளினால் நிதி வழங்கப்படுகின்ற ஏனையவர்களும் விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை புதுப்பிப்பதை தடுக்க இவ்வாறு தண்டனை வழங்கப்பட வேண்டும்’ என்று கலாநிதி குணரட்ன கூறினார்.

‘விடுதலை புலிகளின் பிரசாரங்களும் பரிகாரங்களும் ஜேர்மனியில் இரண்டாவது உலக மகா யுத்தத்துக்கு பிறகு நாஜி சின்னங்களும் செயற்பாடுகளும் தடைசெய்யப்பட்டதைப் போன்று என்றென்றைக்கும் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். விடுதலை புலிகளின் பிரசாரமே அந்த இயக்கத்தின் திட்டங்கள் புதுப்பிக்கப்படுவதற்கு வசதியான சூழ்நிலைகளை உருவாக்கும் ஆபத்தைக் கொண்டிருக்கும்’ என்று சுட்டிக்காட்டிய கலாநிதி குணரட்ன, ஜனநாயகங்கள் வெளிக்காட்டுகின்ற சகிப்புத்தன்மையும் பொறுமையும் வன்முறையை மீள்விக்கிறது. அரசாங்கங்கள், இறுக்கமான விழிப்புணர்வுடன் இல்லாமல் அலட்சியப்போக்குடன் நடந்துகொண்டால் அந்த வெளிகளை பயன்படுத்தி பயங்கரவாத குழுக்கள் மீண்டும் வருவதற்கு முயற்சிக்கும் என்றும் கூறினார்.

‘பயங்கரவாத பதாதைகளையும் சின்னங்களையும் காட்சிப்படுத்துவதற்கு ஜனநாயகம் ஒன்று அனுமதித்து பிரசாரங்களுக்கு அனுமதிக்குமேயானால் அடுத்த நடவடிக்கையாக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வன்முறையே வெடிக்கும். இஸ்லாமிய அரசையும் மற்றும் அல்கொய்தா இயக்கங்களை போன்று விடுதலை புலிகளும் மரணத்தை புகழ்பாடி பெருமைப்படுத்தினார்கள். இறந்த பயங்கரவாதிகளை நினைவு கூர்ந்து நிகழ்வுகள் நடத்தப்படுவதற்கு அனுமதிக்கப்படுமேயானால் அது நாசகார கலாசாரத்துக்கே வழிவகுக்கும்’ என்றும் கலாநிதி குணரட்ன எச்சரிக்கை செய்தார்.

2009 மேயில் நான்காவது ஈழப்போரின் முடிவுக்கு பின்னர் இருந்து தங்களை புதுப்பித்து கொள்வதற்கு விடுதலை புலிகளினால் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்தத் திட்டங்களுக்கு வெளிநாடுகளிலுள்ள விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புகள் ஆதரவளித்தன. 2015இல் நல்லாட்சி அரசாங்கத்தினால் வெளிநாடுகளிலுள்ள விடுதலை புலிகள் ஆதரவு அமைப்புகள் மீதான தடை இலங்கையில் நீக்கப்பட்டதன் விளைவாக புலிகளை மீள்விக்கும் திட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்தது என்று குற்றம் சாட்டிய கலாநிதி குணரட்ன, தடை நீக்கப்பட்ட வெளிநாடுகளிலுள்ள விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புகளில் சில இலங்கையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அத்தகைய சகல அமைப்புகள் மீதும் மீண்டும் அரசாங்கம் தடை விதிக்க வேண்டியது அவசியமாகும். அதனால், இலங்கையின் வடக்கு – கிழக்கில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் புலனாய்வு நடவடிக்கைகளும் பிரிவினைவாத கோட்பாடு இல்லாமல் போகும்வரைக்கும் ஒரு தலைமுறைக்கு தொடர வேண்டும் என்றும் யோசனை கூறியிருக்கிறார்.

சர்வதேச பரிமாணம்

திலீபனின் விவகாரத்தினால் மீளமைக்கப்பட்ட உள்ளக பிளவுகளுக்கு மேலதிகமாக சர்வதேச பரிமாணம் ஒன்றும் இருக்க முடியும். அந்த சர்வதேச பரிமாணம் இந்தியாவுடனான தமிழர்களின் உறவுகள் மீது (தற்போது நடைமுறையிலிருக்கும் அதிகார பரவலாக்கல் முறைமை நீக்கப்படாமல் தொடர்ந்து இருப்பதை உறுதிசெய்வதற்கு இந்தியாவின் உதவியை தமிழர்கள் நாடியிருக்கும் நிலையில்) பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

VanniOnline News: 'தியாகி' திலீபனின் 30வது வருட நினைவு நாட்கள் இன்று  ஆரம்பம்!

1987 செப்டெம்பர் 26 திலீபனின் மரணத்தில் முடிவடைந்த 11நாள் உண்ணாவிரதம் பல பிரச்சினைகள் தொடர்பில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை இலங்கை அரசாங்கத்தைக் கொண்டு நடைமுறைபடுத்துவதற்கு அன்றைய இந்திய அரசாங்கம் தவறியதாக குற்றம் சாட்டியே மேற்கொள்ளப்பட்டது. அந்த பிரச்சினைகளில் பிரதானமானது பரவலாக்கப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய வடக்கு –கிழக்கு இணைந்த மாகாண சபைக்கு தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு முன்னதாக இடைக்கால நிர்வாக சபையொன்றை அமைப்பது தொடர்பானதாகும்.

‘வடக்கு - கிழக்கு மாகாண அரசாங்கத்துக்கு நிதி, சட்டம் ஒழுங்கு மற்றும் காணி முகாமைத்துவ அதிகாரங்களை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தயாரில்லாமல் இருந்தது என்பது தெளிவானது. தமிழ்மொழிக்கு சிங்களத்துடன் சமத்துவ அந்தஸ்தை வழங்குவதற்கு அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை கொண்டுவருவது சிக்கலான ஒரு நீண்ட செயன்முறை என்றும் இலங்கை தரப்பு கூறியது. தமிழ் இளைஞர்களை நிர்வாக அணிகளுக்குள்ளும் பாதுகாப்பு படைகளுக்குள்ளும் சேர்ந்து கொள்வதற்கான உற்சாகமும் இருக்கவில்லை. இதன்விளைவாக தமிழ் குழுக்கள் மத்தியில் அச்சம் நிலவியது’ என்று இலங்கைக்கான முன்னாள் இந்திய தூதுவர் ஜே.என்.தீக்ஷித் ‘அசைமன்ட் கொழும்பு’ என்ற தனது நூலில் எழுதியிருக்கிறார்.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய அமைதிகாக்கும் படை தலைமையகத்துடன் விடுதலை புலிகள் அன்றாடம் தொடர்பில் இருந்தார்கள். அவர்களின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் அந்த தலைமையகத்துக்கு அடிக்கடி விஜயம் செய்யும் ஒருவராக இருந்தார். ஆனால் 1987 செப்டெம்பர் நடுப்பகுதியில் இலங்கை -இந்திய சமாதான உடன்படிக்கை தொடர்பில் விடுதலைப் புலிகள் எடுத்த மட்டுப்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு வழங்கும் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்குவதற்கு தீர்மானித்தார்கள் என்றும் தீக்ஷித் எழுதியிருக்கிறார். புதுடெல்லி மீது தவறு இருப்பதாக கூறிய விடுதலை புலிகள் இந்திய அமைதி காக்கும் படைகளுக்கு எதிராக மக்களை ஆர்ப்பாட்டம் செய்ய தூண்டிவிட்டார்கள். சாத்தியமானளவு இடைக்கால நிர்வாக சபையை அமைக்குமாறு கொழும்பை புதுடெல்லி நிர்ப்பந்திக்கத் தொடங்கியது. 

ஆனால் விட்டுக்கொடுக்கக் கூடாது என்று பிரதமர் ஆர். பிரேமதாசவினதும் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலியினதும் நெருக்குதலின் கீழ் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனா இருந்தார். அந்த நேரத்தில் தான் பிரபாகரனின் நெருங்கிய உதவியாளரான திலீபன் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார். இலட்சிய உறுதிபாடு கொண்ட அர்ப்பணிப்பு சிந்தையுடனான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் என்று தீக்ஷித் வர்ணித்த திலீபனின் நிலைப்பாடு இலங்கை - இந்திய சமாதான உடன்படிக்கை தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றவில்லை என்பதும் அந்த உடன்படிக்கைகளின் ஏற்பாடுகளை நடைமுறைபடுத்துவதற்கும் இந்தியா போதுமானளவுக்கு நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்பதுமே ஆகும். இடைக்கால நிர்வாக சபைக்கு தேவையான அதிகாரங்கள் சகலவற்றையும் ஜெயவர்தனா முதலில் பரவலாக்கம் செய்ய வேண்டும் என்று பிரபாகரன் தொடர்ந்து வலியுறுத்தியதாக தீக்ஷித் எழுதியிருக்கிறார். தேவையான அரசியலமைப்பு திருத்தங்களும் நடைமுறைகளும் நிறைவேற்றப்படும் வரை காத்திருப்பதற்கு பிரபாகரன் தயாராய் இருக்கவில்லை. இந்தியாவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஜெயவர்தனா விட்டுக்கொடுத்தால் அவருக்கு எதிராக இராணுவத்தை திசைதிருப்பி விடுவதற்கான திட்டத்தை கூட பிரேமதாசவும் அதுலத்முதலியும் கொண்டிருந்ததாக பிரபாகரன் சந்தேகித்ததாக தனது நூலின் 196ஆவது பக்கத்தில் தீக்ஷித் கூறியிருக்கிறார்.

பிரபாகரனுடன் பேசி அவருக்கு நம்பிக்கையூட்டுமாறு தீக்ஷித்துக்கு புதுடெல்லி நெருக்குதலை கொடுத்து கொண்டிருந்தது. ஆனால் தீக்ஷித் இந்திய புலனாய்வு சேவைகளுக்கு பிரபாகரனை தெரியும் என்பதால் அந்தப் பணிகளை அவர்களே செய்யட்டும் என்று விரும்பினார். இறுதியில் பிரபாகரனை சந்திப்பதற்கு தீக்ஷித்தை புதுடெல்லி நிர்ப்பந்தித்தது. தீக்ஷித் முதலில் ஜெயவர்தனாவை சந்தித்தார். இலங்கை ஜனாதிபதி பிரபாகரனை முதலமைச்சராக நியமிப்பதாகவும் சிலவகையான சட்டம் ஒழுங்கு அதிகாரங்களையும் நிர்வாக அதிகாரங்களையும் இடைக்கால நிர்வாக சபைக்கு வழங்குவதாகவும் இலங்கை ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். அதையடுத்து தீக்ஷித் பிரபாகரனை சந்தித்தார். ஆனால் இடைக்கால நிர்வாக சபையில் பெரும்பான்மையானவர்கள் விடுதலைப் புலிகளாக இருக்க வேண்டும் என்றும் பிரதம நிர்வாகி உட்பட இடைக்கால நிர்வாக சபையின் ஏனைய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு புலிகளுக்கு முக்கிய பங்கு இருக்க வேண்டும் என்று கூறி பிரபாகரன் தனது நிலைப்பாட்டை மேலும் கடுமையாக்கினார். 

வடக்கு - கிழக்கில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் சகல பொலிஸ் நடவடிக்கைகளும் விடுதலைப் புலிகளிடம் தரப்பட வேண்டும் என்று பிரபாகரன் விரும்பினார். பிரதம நிர்வாகி பதவிக்கு மூன்று பேரின் பெயர்களை சமர்ப்பிப்பதற்கு இணங்கிய பிரபாகரன், அந்த மூன்று பெயர்களில் ஒருவரை ஜெயவர்தனா தெரிவு செய்யட்டும் என்றும் பிரபாகரன் கூறினார். ஆனால், ஜனாதிபதி ஜெயவர்தனா பிரதம நிர்வாகியாக சி.வி.கே.சிவஞானத்தை தெரிவு செய்தபோது அது பத்மநாதனாகவே இருக்க வேண்டும் என்று பிரபாகரன் வலியுறுத்தினார். ஜெயவர்தனா அதை நியாயமற்ற கோரிக்கை என்று கருதி இணங்குவதற்கு மறுத்தார்.

இதற்கிடையில் உண்ணாவிரதம் இருந்த திலீபன் இறந்துவிட்டார். இந்த பிரச்சினைகளெல்லாம் போதாதென்று புலிகளின் உயர்மட்ட தலைவர்களில் ஒருவரான புலேந்திரன் உட்பட 17 இயக்க உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு பிறகு பலாலி முகாமில் வைத்து ஒரே நேரத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக சிக்கல் தோன்றியது. இந்திய அமைதி காக்கும் படையுடனான விடுதலைப் புலிகளின் முரண்நிலை தீவிரமடைந்து போர் மூண்டது. இதையடுத்து விடுதலைப் புலிகள் தலைமையிலான தமிழ் இயக்கத்திலிருந்து இந்தியா அந்நியப்படுத்தப்பட்டது. 

2009இல் களத்திலிருந்து விடுதலைப் புலிகள் இல்லாமல் போன பிறகு இந்தியா தமிழர் பிரச்சினையை மீண்டும் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடாகவே கையாண்டது. திலீபனின் விவகாரத்தை தமிழ்க் கட்சிகள் எல்லாம் பெரிதுபடுத்தும் போது இந்தியாவின் இந்த அணுகுமுறைக்கு பின்னடைவு ஏற்படுமோ என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. 

(டெய்லி எக்ஸ்பிரஸ்)