நாட்டில் நில பிரதேசங்களில்  நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வெவ்வேறு  வாகன விபத்துக்களில் பெண்ணொருவர் உள்ளிட்ட ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹபராதுவ

ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொனவிஸ்டாவ - ருமஸ்ஸல வீதியில் பொனவிஸ்டாவ பாடசாலைக்கு அருகில்  இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியில் சென்ற முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதியும் அதில் பயணித்த பெண்ணொருவரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. ஹல்லல - வெலிகம பகுதியைச் சேர்ந்த 53 வயதாக பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அம்பாந்தோட்டை

அம்பாந்தோட்டை - அம்பலாங்கொhடை வீதி, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகே அம்பலாங்கொடை நோக்கி பயணித்த லொறியொன்று சைக்கிளுடன் நடந்து சென்ற நபரின் மீது மோதியதில் சித்ரகல - அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 58 வயதான நபர் உயிரிழந்துள்ளார். விபத்துக்குக் காரணமான லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஹபரண

ஹபரண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருகோணமலை - பரகஸ்வௌ வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹபரண நோக்கி சென்ற முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் புரண்டு விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் பயணித்த நபர் ஹபரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை வீதி - ஹபரண பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்;.

குருணாகல்

குருணாகல் - மில்லவ பகுதி, குருணாகல் - கண்டி வீதியில் சென்ற பாதசாரியொருவரின் மீது வாகனமொன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளதுடன் விபத்துக்குக் காரணமான வாகனம் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். மில்லவ - குருணாகல் பகுதியில் வசிக்கும் 46 வயதான நபரே விபத்தி;ல் உயிரிழந்துள்ளார். சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யக்கல

யக்கல - கண்டி வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளொன்று வீதியில் புரண்டு வீதிநடுவே உள்ள பாதுகாப்பு வேலியில் மோதி எதிர்த்திசையில் வந்த காரொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யக்கல - கெசெல்வத்துகாட பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.