நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் பல்வேறு அனர்த்தங்களுக்கு காரணமாக அமைகின்றது. அண்மைகாலமாக திடீரென பெய்யும் மழை , காற்று மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பல்வேறு  உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

காலநிலை அவதான நிலையம் முன்கூட்டியே எச்சரிக்கைகளை விடுகின்ற போதிலும் மக்கள் திடீர் அனர்த்தங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியாதவர்களாகவே காணப்படுகின்றனர்.

 இவற்றுக்கு மத்தியில் கண்டி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் தாய் தந்தை குழந்தை என மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர் . குறித்த கட்டிடம் இடிந்து அருகில் உள்ள வீட்டின் மீது விழுந்து அதன் காரணமாகவே இவ்வாறு அர்த்தம் நிகழ்ந்துள்ளது.

 பாரிய சத்தம் கேட்டதாகவும் இதனைத்தொடர்ந்து வெளியில் சென்று பார்த்தபோது கட்டிடம் இடிந்து விழுந்தது தெரியவந்ததாகவும் சம்பவத்தில் உயிர் தப்பியவர்கள் கூறியுள்ளனர் .

மேலும் இடிந்து விழுந்த 5 மாடிக்கட்டிடம் ஹோட்டல்  எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே கண்டி மாவட்டத்தில் அண்மையில் உணரப்பட்ட நில அதிர்வுக்கும் 5 மாடிக் கட்டிடம்  இடிந்து விழுந்தமைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

கட்டிடம்  அமைந்திருந்த நிலப்பகுதி மிகவும் சரிவானது என்றும் கூறப்படுகின்றது. அவ்வாறெனில் குறித்த பகுதியில் மண் ஆய்வுக்குட்படுத்தப்படாமல் மாடிக் கட்டிடம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டதா?  என்ற கேள்வியும் எழுகிறது.

மேலும் மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறான அனர்த்தங்கள் தொடர்ந்து வருகின்றன.  குறித்த  அனர்த்தம் தொடர் மாடி வீடுகளில் வசிக்கும் பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

 கொழும்பை பொறுத்தமட்டில் 80 சதவீதமான மக்கள் தொடர் மாடிகளில் வசித்துவருகின்றனர். அதேபோல பல கட்டிடங்கள் முறையாக முகாமைத்துவம் செய்யப்படாமல் உள்ளன. இவ்வாறான அனர்த்தம் ஒன்று கொழும்பில் ஏற்படுமானால் பலர் உயிரிழக்கநேரும்.

அத்துடன் இவை சரியான வகையில் கட்டப் படுகின்றனவா? என்பது தொடர்பாகவும் அதன் தரம் தொடர்பாகவும் அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுப்பது அவசியம். இவற்றை உறுதி செய்ய அரசு ஒரு குழுவை நியமித்து கண்காணிக்குமானால் பல அனர்த்தங்களை எதிர்காலத்தில் தடுக்கக் கூடியதாக இருக்கும் என்பதே யதார்த்தம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்