-சுபத்ரா
வடக்கை மீண்டும் இராணுவப் பிடிக்குள் கொண்டு வரும் அடுத்த கட்டத்துக்குள் அரசாங்கம் நகர்ந்திருக்கிறது. 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், வடக்கு, கிழக்கில் ஓரளவுக்கு திறக்கப்பட்ட ஜனநாயக வெளியை மீண்டும் அடைப்பதற்கான நகர்வாகவே இது அமைந்துள்ளது.

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு வடக்கு, கிழக்கில் உள்ள நீதிமன்றங்களின் மூலம் பொலிசார் தடை உத்தரவுகளைப் பெற்று, நிகழ்வுகளை முழுமையாகத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கத்துக்கு இதுபோன்ற இறுக்கமான கெடுபிடிகளைக் கையாளுவது ஒன்றும் புதிய விடயமில்லை.

2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகளின் நினைவுச் சின்னங்கள், அடையாளங்களை இந்த அரசாங்கமே முற்றாக அழித்தது. துயிலும் இல்லங்கள் பெரும்பாலானவை இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டன அல்லது யாரும் நுழைய முடியாத இடங்களாக தடை செய்யப்பட்டன. மாவீரர் நாளில் தீபம் ஏற்றியவர்கள் மீது இராணுவ அச்சுறுத்தல்கள் ஏவிவிடப்பட்டன.

இதனால், 2014ஆம் ஆண்டு வரை, அடையாளம் வெளிப்படுத்த முடியாமல்- சில நினைவுகூரல்கள் இடம்பெற்றதை விட, வேறெந்த நினைவேந்தல் நிகழ்வுகளையும் நடத்த முடியாத நிலை காணப்பட்டது. 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், திலீபன் நினைவேந்தல், மாவீர்ர் நாள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களுக்கு தடை விதிக்கப்படவில்லை.

முன்னைய அரசாங்கத்தின் பிற்காலத்தில் இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்க பொலிசார் நீதிமன்றங்களிடம் விண்ணப்பித்த போதும், அத்தகைய உத்தரவுகள் வழங்கப்படவில்லை. ஆனால், இந்தமுறை எல்லாமே தலைகீழாக மாறியிருக்கிறது. கடந்தமுறை பொலிசாரின் விண்ணப்பங்களை நிராகரித்த நீதிமன்றங்கள், இப்போது, பொலிசார் கேட்ட தடை உத்தரவுகளைக் கொடுத்து, நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்திருக்கின்றன. விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும் அதன் உறுப்பினர்களை நினைவு கூருவது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றம் என்றும், நீதிமன்றங்கள் கூறுகின்றன. 

பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவும் இதனையே தான் கூறுகிறார். நினைவேந்தல் நிகழ்வுகளை அனுமதிக்க முடியாது என்று அவர் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

நினைவேந்தல் நிகழ்வுகளை தடுக்கும் விவகாரத்தில், அரச நிர்வாகம், பாதுகாப்புத் தரப்பு, நீதித்துறை எல்லாமே, ஒருமித்த கருத்துக்கு வந்திருக்கின்றன. கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிந்த மூன்று வாரங்களில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. அப்போதே அதற்கு தடைவிதிக்கப்படலாம் என்ற அச்சம் காணப்பட்டது. ஆனாலும், அரசாங்கம் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. 

புலிகளை நினைவு கூருவதற்குத் தான் தடை என்றும், போரில் இறந்த தமது உறவுகளை தமிழ் மக்கள் நினைவு கூரத் தடையில்லை என்றும் அப்போது இதே அரசாங்கம் தான் கூறியிருந்தது. அதுபோல, 2018ம் ஆண்டு கூட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பதவியில் இருந்த போது தான், மாவீரர் நாள் நினைவுவேந்தல் இடம்பெற்றது,

அப்போதும், இதே அரசாங்கம், நினைவுகூரலைத் தடுக்க பெரியளவில் முயற்சிக்கவில்லை. ஆனால் இப்போது, முழு அளவில் நினைவுகூரலைத் தடுக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகள் மிகப் பெரியளவில் நடக்கும் ஒன்றாக இல்லாவிட்டாலும், இதற்கே அரசாங்கம் இந்தளவு கடும் போக்கை காட்டுகிறது என்றால், மாவீரர் நாள் விடயத்தில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கும் என்பது கேள்விக்குரியதாக உள்ளது. போரில் இறந்து போனவர்களை நினைவுகூருவதை பயங்கரவாத தடைச் சட்டத்தைக் கொண்டு அடக்கும் அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு, வடக்கு, கிழக்கை மீண்டும் இறுக்கமான இராணுவ ஆட்சிக்குள் கொண்டு வரும் முயற்சியின் ஒரு கட்டமாகவே பார்க்கப்படுகிறது,

2015இற்குப் பின்னர், வடக்கில் படிப்படியாக பல இராணுவ முகாம்கள் மூடப்பட்டன. சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டன. வீதித் தடைகள் நீக்கப்பட்டன. இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடக்கப்பட்டனர்.  ஆனால், 2019 ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைச் சாட்டாக வைத்துக் கொண்டு இராணுவத்தினர் முகாம்களை விட்டு வெளியே கொண்டு வரப்பட்டனர். அவர்களுக்கு பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் மூலம் அதிகாரங்களும் வழங்கப்பட்டன. அதற்குப் பின்னர் படிப்படியாக இராணுவத்தினரின் செயற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு, இப்போது முக்கிய இடங்களில் இராணுவத்தினர் பாதுகாப்பில் ஈடுபடுகிறார்கள். வீதித் தடைகள், தடை முகாம்கள், காவலரண்கள் என்பன முளைத்திருக்கின்றன. இதன்மூலம் இராணுவக் கண்காணிப்புக்குள் இருக்கும் மனநிலைக்குள் வடக்கில் உள்ள தமிழ் மக்கள் வாழப் பழகிக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இப்போது அடுத்தகட்டமாக, நினைவுகூரல் நிகழ்வுகளில் பங்கேற்க முடியாமல் தடுக்கப்பட்டு வருகிறார்கள். இது விடுதலைப் புலிகளின் கால போராட்ட நினைவுகளில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றுகின்ற ஒரு நடவடிக்கை. கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இந்த இலக்கை எட்டுவதில் அரசாங்கம் தோல்வியடைந்திருக்கிறது, இப்போது அதனைச் செயற்படுத்தும் முயற்சியில் மீண்டும் இறங்கியிருக்கிறது, நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி இதனை தடுக்க முனைகிறது. ஆனால் இங்கு நீதிமன்றங்கள் வலிந்து போய் நினைவேந்தல்களை தடுக்கவில்லை.அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானத்துக்கமைய பொலிசாரே இதனை தடுக்க நடவடிக்கை  எடுத்துள்ளார்கள். பாதுகாப்பு அமைச்சின் கீழ் தான், பொலிஸ் திணைக்களம் உள்ளது. அது கூட ஒரு சிவில் திணைக்களமாக செயற்படவில்லை.

இராணுவமயப்படுத்தப்பட்ட ஒன்றாகவே இப்போது பொலிஸ் திணைக்களம் உள்ளது. இதன் ஊடாகவே அரசாங்கம், நீதிமன்றத் தடைகளைப் பெற்றிருக்கிறது. ஆனால், இந்த தடைகளை நீதித்துறை நடவடிக்கைகளாக காட்டி தப்பிக்க அரசாங்கம் முற்படுகிறது. தமது உறவுகளை நினைவு கூரும் உரிமை தமிழ்மக்களுக்கு உள்ளது என்று சர்வதேச சமூகம் முன்னர் வலியுறுத்தியிருந்தது. அந்த உரிமை மறுக்கப்படுவதற்கு எதிராகவும் குரல் கொடுத்திருந்தது. ஆனால் இப்போது மீண்டும் தமிழ் மக்களுக்கு அந்த உரிமை மறுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டை இராணுவமயப்படுத்தி வரும் அரசாங்கம், இந்த உரிமையை தமிழ் மக்களுக்கு விட்டு வைக்கும் என்பது எதிர்பார்க்க முடியாத ஒன்று தான்.

ஆனால் இவ்வாறான தடைகள் தான், பிரச்சினைகளைப் பூதாகாரப்படுத்துகின்றன என்பதை அரசாங்கமோ படைத்தரப்போ புரிந்து கொள்வதாகத் தெரியவில்லை. அடங்குமுறைகளில் இருந்து தான், எழுச்சி பிறப்பெடுக்கிறது. இலங்கையில் தமிழ்களுக்கு எதிராக காலம் காலமாக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகள் தான், ஆயுதப் போராட்டத்துக்கு தூண்டுதலாக இருந்தது என்பது வரலாறு. அத்தகைய வரலாற்றை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளாதிருப்பது தான் முக்கியமானது.

அவ்வாறான நிலை நாட்டை சீரழித்து விடும். நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு விதிக்கப்படும் தடைகளும் கூட, எதிர்மறையான எண்ணங்களுக்கு வித்திடக் கூடும். இந்த விடயத்த்தை அரசாங்கம் சரியான முறையில் கையாளத் தவறினால், அல்லது இதே கடும் போக்கில் அணுக முற்பட்டால், எதிர்மறைச் சிந்தனைகள் தான் பலமடையும். இத்தகைய நடவடிக்கைகளின் மூலம், அதனைத் தான், அரசாங்கம் விரும்புகிறதா?