மொஸ்கோவுக்கான இலங்கை தூதுவர் எம்.டி. லமாவங்ஷ, கொவிட்-19 க்கு எதிரான ரஷ்யாவின் தடுப்பூசியை தனக்கு செலுத்தி சோதனை செய்வதற்கு விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

நான் இலங்கையிலிருந்து திரும்பி வந்தவுடன் எதிர்காலத்தில் ஸ்பூட்னிக் 5 தடுப்பூசியை பெற தயாராக இருக்கிறேன். தடுப்பூசி இப்போது 3 ஆம் கட்ட சோதனையில் உள்ளது. அந்த சோதனையில் பங்கெடுப்பதில் நான் மகிழ்ச்சியடைவேன் என்று லமாவங்ஷ தெரிவித்துள்ளார்.

சில நாடுகள் அண்மையில் கொவிட்-19 பரவுவதை கட்டுப்படுத்துவில் சில குறைபாடுகளை பதிவு செய்திருந்தாலும், உலகளாவிய சமூகம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

மேலும் புதிய நோய்த்தொற்றின் மீது முழு கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கான முயற்சியை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகஸ்ட் தொடக்கத்தில் கொவிட்-19 ஐ ஏற்படுத்தும் வைரஸுக்கு எதிரான தடுப்பூசி சோதனையை பதிவு செய்த முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றது.

அதன் பிறகு 20 க்கும் மேற்பட்ட நாடுகளுடன் ஒரு பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி வழங்குவதற்கான ஒப்பந்தங்களையும், ஐந்து நாடுகளுடன் வெகுஜன உற்பத்திக்கான ஒப்பந்தங்களையும் எட்டியுள்ளது.

ரஷ்ய சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, ஸ்பூட்னிக் 5 பாதுகாப்பானது மற்றும் வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் திறன் கொண்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

எனினும் ஸ்பூட்னிக் 5 மூன்றம் கட்ட  பரிசோதனை இன்னும் நிறைவுபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.