-கார்வண்ணன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு பிரதான அனுசரணை வழங்கிய நாடுகள், அரசாங்கத்தின் உள்நாட்டுப் பொறிமுறைகளின் மீது நம்பிக்கையில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டன.

UN human rights chief's remarks on 20A unwarranted, Sri Lanka tells UNHRC  session | EconomyNext

கடந்தவாரம் தொடங்கிய ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத்தொடரில், நாடுகளின் மனித உரிமைகள் நிலை குறித்த தமது அறிக்கையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையாரும் அதே கருத்தை தான் வெளியிட்டிருந்தார்.

இலங்கை தொடர்பாக, புதிய கவனத்தை செலுத்த வேண்டும் என்று அவர் பேரவையின் உறுப்பு நாடுகளிடம் கோரியிருந்தார்.

அதற்குப் பின்னரே, இணை அனுசரணை நாடுகளின் சார்பில் உரையாற்றிய மனித உரிமைகளுக்கான பிரித்தானியாவின் தூதுவர் ரிட்டா பிரெஞ்ச், இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறைகளின் மீது இனி நம்பிக்கை வைக்கத் தயாரில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

30/1 தீர்மானத்தில் இருந்து விலகும் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து ஏமாற்றத்தை வெளியிட்ட அவர், உள்நாட்டு செயல்முறைகளின் மூலம் நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை அரசாங்கம் கொடுத்திருந்த வாக்குறுதியை நம்பத் தயாரில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு, உள்நாட்டு செயல்முறைகளுக்கு காலஅவகாசம் கொடுக்கப்பட்ட பின்னரே, கலப்பு விசாரணைப் பொறிமுறைக்கான பரிந்துரை ஜெனிவாவில் முன்வைக்கப்பட்டது.

U.N. rights chief says 'as many as 10,000' flee Myanmar army operations -  Reuters

அதனை ஏற்றுக்கொண்ட மைத்திரி- ரணில் அரசாங்கம் மிக சாதுரியமான முறையில், தமது ஆட்சிக்காலத்தை நகர்த்திச் சென்றது.

அதற்குப் பின்னர் வந்த தற்போதைய அரசாங்கம், அந்த தீர்மானத்துக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று கைவிரித்து விட்டது,

இப்போது மீண்டும், உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கையில்லை என்று பழைய இடத்திலேயே வந்து நிற்கின்றன அனுசரணை நாடுகள்.

இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டுப் பொறிமுறைகளில் நம்பிக்கை வைக்க முடியாது என்ற முடிவு இப்போது எடுக்கப்பட்டதல்ல.

பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழ் மக்கள் இந்த முடிவுக்கு எப்போதோ வந்து விட்டார்கள்.

அதனால் தான் அவர்கள், போர் முடிந்த காலத்தில் இருந்தே, சர்வதேசப் பொறிமுறையை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

எனினும், சர்வதேச சமூகம், இந்த விடயத்தில் மெதுவாகவே அடியெடுத்து வைத்தது. அதற்குள்ளாக கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் ஆகி விட்டன.

இப்போது தான், இனி உள்ளகப் பொறிமுறை சாத்தியமில்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பசெலெட் அம்மையார், ஏற்கனவே இந்தக் கருத்தை முன்வைத்திருந்தார்.

இதற்கு முன்னர் ஐ.நா மனித உரிமை ஆணையாளராக இருந்த இளவரசர் செயிட் ராட் அல் ஹூசேனும் கூட, கலப்பு அல்லது உள்ளக விசாரணைப் பொறிமுறைகள் இனி சாத்தியமில்லை, வேறு மாற்று வழிகளைப் பற்றி சர்வதேச சமூகம் யோசிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆனாலும், முன்னைய அரசாங்கத்தைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருந்த மேற்குலகம், பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பின் கோரிக்கையை கருத்தில் கொள்ளவில்லை.

அத்துடன், இந்த விவகாரத்தில் யதார்த்த சூழலையும் அவர்கள் புரிந்து கொண்டு செயற்படவில்லை.

அதனால் தான், கடந்த 2015ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தில், கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகாலம், இந்த சக்கரம் ஒரே இடத்திலேயே சுழன்று கொண்டிருக்கிறது.

இது பாதிக்கப்பட்ட மக்களை நம்பிக்கையிழக்கச் செய்திருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் எந்த நீதியையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

Report on the 44th session of the Human Rights Council | Universal Rights  Group

நீதிக்காக காத்திருத்தல் என்பது அவர்களின் தலைவிதியாகவே மாறிப் போயிருக்கிறது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு இந்தநிலை எப்போதோ தெரிந்த ஒன்று.

சர்வதேச சமூகத்துக்கும் இது தெரியாத விடயமல்ல. இலங்கையில் நல்லிணக்க செயல்முறைகள் திரும்பத் திரும்ப ஒரே வட்டத்தை தான் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாத ஒன்றல்ல.

ஆனாலும் அந்த வட்டத்தை விட்டு,வெளியே கொண்டு வர சர்வதேச சமூகம் தயாராக இருக்கவில்லை.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் கூட- அரசாங்கம் எப்படி இந்த விவகாரத்தை கையாளப் போகிறது என்று தெரிந்த பின்னரும் கூட, சர்வதேச சமூகம், தமக்கென வகுக்கப்பட்ட எல்லையை மீறத் தயாராக இல்லை.

சர்வதேச சமூகத்துக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் மீறுகின்ற போது, சர்வதேச சமூகம் மட்டும் நியதிகளுக்குள் கட்டுப்பட்டு நிற்கப் பார்க்கிறது.

அதன் விளைவு தான், அவர்களுக்கு கிடைத்திருக்கின்ற ஏமாற்றம். அவர்கள் இப்போது ஏமாற்றம் வெளியிடுவதால் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை. ஏனென்றால், பாதிக்கப்பட்ட தரப்புகளுக்கு எந்த நன்மையையும் அவர்களால் செய்ய முடியவில்லை.

இனி அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? இது தான் இப்போது கேட்கப்பட வேண்டிய கேள்வி. இதுவரை இந்த பிரச்சினையை கையாளுவதற்கு இலங்கைக்கு போதிய அவகாசம் கொடுக்கப்பட்டு விட்டது.

அதற்குள் அவர்கள் கொடுத்த வாக்குறுதியையும் காப்பாற்றவில்லை.

நீதியான முறையில் நியாயமான முறையில் நல்லிணக்க பொறிமுறைகளை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையையும் கொடுக்கவில்லை.

தண்டனையில் இருந்து தப்பித்தலை தடுக்க முடியாத அரசாங்கமாக இலங்கை தன்னை வெளிப்படுத்தி விட்டது.

குற்றமிழைத்த படையினரை தண்டிக்காமல், அவர்களுக்கு மன்னிப்பளித்து விடுவிக்கும் ஒன்றாக, அவர்களை காப்பாற்றுகின்ற அரசாங்கமாகவே இலங்கை அரசு தன்னை நிரூபித்திருக்கிறது.

இவ்வாறான ஒரு அரசாங்கத்திடம், இனி நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. 

நியாயமான ஒரு தீர்வு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை- காணாமல்  ஆக்கப்பட்டோரின் உறவுகள் | Virakesari.lk

நீதியை வழங்கும் பொறுப்பை ஒப்படைக்க முடியாது என்று, சர்வதேச சமூகம் முடிவெடுக்கும் நிலைக்கு வந்திருக்கிறது.

முன்னைய அரசாங்கம் இந்த விவகாரத்தை, தமக்கு சாதகமாக கையாளுகிறது என்று தெரிந்திருந்தும், சர்வதேச சமூகம் தமது நலன்களுக்காக பொறுத்துக் கொண்டது.

இப்போதைய அரசாங்கம் எதையும் செய்யமுடியாது என்று மல்லுக்கட்டும் ஒன்றாக இருப்பதால், அதனுடன் எந்த இணக்கத்தையும் எதிர்பார்க்க முடியாத நிலைக்கு சர்வதேசம் வந்திருக்கிறது.

இந்த அரசாங்கத்தைக் கொண்டு தமது நலன்களை பூர்த்தி செய்ய முடியாது என்பதும் சர்வதேச சமூகத்துக்கு தெரியும்.

எனவே வேறு வழியின்றி இந்த விவகாரத்தை வேறொரு புள்ளிக்கு கொண்டு செல்வதை விட மேற்குலகத்துக்கு வேறு வழியில்லை.

அவ்வாறான ஒரு மாற்றுவழியை மேற்குலகம் வரும் மார்ச் மாதம் முன்னகர்த்தும் என்றே எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்த இடத்தில் சர்வதேசத்துக்கு இரண்டு வழிகள் தான் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட தரப்புகளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு சர்வதேச பொறிமுறையை உருவாக்கி நம்பிக்கையை ஏற்படுத்துதல்.

இன்னொன்று, இந்த விடயத்தில் நீதியை எங்களால் பெற்றுக் கொடுக்க முடியாது என்று கைவிட்டு ஒதுங்கிக் கொள்வது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையப் பெற்றுக் கொடுக்கும் சர்வதேச பொறிமுறையை உருவாக்குவது இலகுவானதல்ல. அதற்கு பல படிமுறைகளையும் தடைகளையும் தாண்ட வேண்டியிருக்கும். ஆனால் அதுவே அவசியமானது. மாறாக இதனை கைகழுவி விடும் முடிவை எடுத்தால், அது சர்வதேச சமூகத்துக்கு வரலாற்றுப் பழியாகவே நீடிக்கும்.

உலக மக்கள் ஐ.நாவையோ, சர்வதேச நீதிப் பொறிமுறைகளையோ நம்பிக்கை வைக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

இதில் எது நடக்கப் போகிறது?