தேவ்தத் படிக்கல் மற்றும் ஆரோன் பிஞ்ச்யின் அதிரடியான ஆரம்பத்தினால் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 163 ஓட்டங்களை குவித்துள்ளது.

13 ஆவது ஐ.பி.எல். தொடரின்  மூன்றாவது போட்டி விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் டேவிட் வோர்னர் தலைமையிலான சன் ரைஸஸ் ஐதராபாத் அணிக்கிடையிலும் ஆரம்பமானது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணியானது களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்காக களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தேவ்தத் படிக்கல் மற்றும் ஆரோன் பிஞ்ச் ஆகியோரின் அதிரடியான ஆரம்பம் கைக் கொடுத்தது.

மொத்தமாக 11 ஓவர்களை எதிர்கொண்ட இவர்கள் இருவரும் 90 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

அதன் பின்னர் 10.6 ஆவது ஓவரில் விஜய் சங்கரின் பந்து வீச்சில் தேவ்தத் படிக்கல் 42 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகளுடன் மொத்தமாக 56 ஓட்டங்களை குவித்து பொல்ட் முறையில் ஆட்டமிழக்க, பிஞ்ச் அடுத்த ஓவரின் முதல் பந்தில் அபிஷேக் சர்மாவின் சுழலில் சிக்கி 29 ஓட்டத்துடன் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்காக அணித் தலைவர் விராட் கோலி, டிவில்லியர்ஸுடன் கைகோர்த்து ஆடிவர பெங்களூரு அணி 15 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து 116 ஓட்டங்களை குவித்தது.

எனினும் 15.5 ஆவது ஓவரில் விராட் கோலி நடராஜனின் பந்து வீச்சில் ரஷித் கானிடம் பிடிகொடுத்து 14 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

பின்னர் சிவம் டூப்புடன் கைகோர்த்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிவில்லியர்ஸ் 19.2 ஆவது ஓவரில் மொத்தமாக 29 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி அடங்கலாக அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

எனினும் அவர் அதே ஓவரின் மூன்றாவது பந்தில் இரண்டு ஓட்டங்களை பெற முற்படுகளையில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இறுதியாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில்  விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை குவித்தது.

ஐதராபாத் அணி சார்பில் பந்து வீச்சில் விஜய் சங்கர், நடராஜன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

Photo Credit : ‍IPL