கோழி இறைச்சிக்கடை என்ற போர்வையில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து நடத்திச் செல்லப்பட்ட போதைப்பொருள் விற்பனை நிலையமொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. 

சந்தேகநபரிடமிருந்து போதைப்பொருள் தயாரிக்கப்பயன்படும் புகையிலை, 75 போதைப்பொருள் அடங்கிய பைக்கட்டுக்கள், இறக்குமதி செய்யப்பட்ட ஒருதொகை பாக்கு மற்றும் 10 கிலோ போதைப்பொருளுக்கான சுவையூட்டி ஆகிய பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காலி நகரின் பிரதான பாடசாலைகள் இரண்டிற்கு அருகில் கோழி இறைச்சிக் கடை என்ற போர்வையில் இந்த போதைப்பொருள் விற்பனை நிலையம் இயங்கி வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.  

தலாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் சந்தேக நபரின் வீட்டை சுற்றிவளைத்த போது அவர் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்ததாகவும், போதைப்பொருள் அடங்கிய 1 பைக்கட்டை 100 ரூபாவுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.