வொஷிங்டன், வெள்ளை மாளிகைக்கு 'ரைசின்' என்ற கொடிய விஷம் தடவிய கடிதத்தை அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

குறித்த பெண் நியூயோர்க் - கனடா எல்லையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று அமெரிக்க சட்ட அமுலாக்க அதிகாரிகள் மூவர் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.

கைதான பெண்ணின் பெயர் விபரங்கள் உடனடியாக வெளிப்படுத்தப்படாத நிலையில் கூட்டாட்சி குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்ள நேரிடும் என்றும் கூறப்படுகிறது.

விஷம் தடவப்பட்ட கடிதமானது வெள்ளை மாளிகையை வந்து அடைவதற்கு முன்னர் இந்த வாரத் தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சட்ட அமுலாக்க அதிகாரிகள் சனிக்கிழமை கூறினர்.

வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ள மேற்படி கடிதம் கனடாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ரைசின் என்பது ஆமணக்கு விதைகளில் காணப்படும் ஒரு விஷம் ஆகும். இது மனிதர்களுக்கு ஆபத்தானது மாத்திரமன்றி ஒருவரை 36 முதல் 72 மணி நேரத்திற்குள் கொல்லக் கூடியதும் ஆகும்.