விகாரைகளின் கட்டுமானப் பணிகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் உபகரணங்களுக்கென கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடங்கொட, மீகஹதென்ன, பதுரலிய மற்றும் மத்துகம பகுதிகளிலுள்ள விகாரைகளுக்குச் சென்ற சந்தேகநபர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பல முறைப்பாடுகள் ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ளது. 

சந்தேக நபரான ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் இராணுவ சிப்பாயாக தன்னைக் அடையாளப்படுத்திக்கொண்டு இவ்வாறு பண மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சந்தேக நபர் இராணுவ கட்டுமானப் பணிகளில் மிகுதியாகவுள்ள சீமெந்து, மண், கல் மற்றும் மாபிள்கள் உள்ளிட்ட பொருட்களை விகாரைகளின் நிர்மாணப் பணிகளுக்கு வழங்குவதாக தேரர்களிடம் கூறி; பண மோசடி செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹொரண பகுதியைச் சேர்ந்த 58 வயதான ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஆவார். சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.