லெபனான், தலைநகர் பெய்ரூட்டில் அமைந்துள்ள ரூமி சிறைச்சாலையில் 200 க்கும் மேற்பட்ட கைதிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இந் நிலையில் குறித்த சிறையில் கைதிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் கைதிகளின் விரைவான சோதனைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு, ரூமி சிறைச்சாலையில் 13 கைதிகள் மற்றும் ஒன்பது பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட 22 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தாக உள்நாட்டு பாதுகாப்புப் படைகள் ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

உள்ளூர் ஊடகங்களின்படி, ரூமி சிறைச்சாலையில் சுமார் 4,000 கைதிகள் உள்ளனர். 

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கையை விடவும் மூன்று மடங்கு அதிகமான கைதிகள் தற்போது அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இது கொரோனா வைரஸ் பரவலின் மத்தியில் பரவலான விமர்சனங்களைத் தூண்டியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை, சிறைச்சாலையில் உள்ள டஜன் கணக்கான கைதிகளின் குடும்பங்கள் பெய்ரூட்டில் உள்ள நீதி மன்றங்களின் முன், கொரோனா அச்சம் காரணமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.