(செய்திப்பிரிவு)

தனது தேசிய சுதந்திரத்தையும் இறையாண்மையையும் பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்குகின்ற இலங்கையின் தீர்மானத்திற்கு எகிப்து வரவேற்புத் தெரிவித்திருக்கிறது.

இலங்கைக்கான எகிப்திய தூதுவர் ஹுசைன் அல் சஹார்டி வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துக் கலந்துரையாடியிருந்ததுடன் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தல் மற்றும் நாட்டின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் பாதுகாத்தல் ஆகிய விடயங்களில் இலங்கையின் புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு தனது பாராட்டையும் வெளிப்படுத்தினார்.

மேலும் இச்சந்திப்பின் போது இருநாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாகப் பேணப்பட்டுவரும் இருதரப்பு நல்லுறவு தொடர்பில் நினைவுகூரப்பட்டதுடன் 1957 ஆம் ஆண்டில் இலங்கையுடன் தனது இராஜதந்திரத்தொடர்புகளை ஆரம்பித்த முதலாவது ஆபிரிக்க அராபிய நாடாக எகிப்து விளங்கியமை குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்தோடு தற்போதைய சூழ்நிலையில் இருநாடுகளுமே அடிப்படைவாதம், கொவிட் - 19 வைரஸ் பரவலின் பின்னரான பொருளாதார நெருக்கடிநிலை, சுற்றுலாப்பயணத்துறையின் பின்னடைவு, காலநிலை மாற்றம், போதைப்பொருள் மற்றும் ஆட்கடத்தல் போன்ற ஒரேவிதமான சவால்களை எதிர்கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் தினேஷ் குணவர்தன, அவற்றை முறியடிப்பதில் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்.