‘தமிழின நன்மைக்காகவே வழக்கை மீளப் பெற்றேன்’ டெனிஸ்வரன் செவ்வி

20 Sep, 2020 | 12:02 PM
image

(நேர்காணல்:- ஆர்.ராம்)

தமிழினத்தின் நன்மையைக் கருத்திற் கொண்டே வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர்  நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை மீளப்பெற்றேன் என்று வட மாகாண சபையின் போக்குவரத்து, மீன்பிடி முன்னாள் அமைச்சர்  பா.டெனிஸ்வரன் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார் அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு: 

கேள்வி:- வட மாகாண சபையின்  அமைச்சரவையிலிருந்து உங்களை நீக்கியமை தவறு என்று கூறும் நீங்கள் வழக்கை மீளப்பெற்றுள்ளீர்களே?

பதில்:- 2017ஆம் ஆண்டு காலப்பகுதியில் நான் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டிருந்தேன். வட மாகாணத்தின் அப்போதைய முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் நியமிக்கப்பட்ட ஊழல் மோசடிகள் பற்றிய விசாரணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து ஈற்றில் என் மீது எவ்விதமான குற்றச்சாட்டுக்களுமில்லை என்றே கூறியிருந்தது. 

எனினும், விக்கினேஸ்வரனின் அமைச்சரவையில் இருக்கும்  ஒரு சிலர்  ஊழல் செய்ததாக  குற்றச்சாட்டுக்களும் விசாரணை அறிக்கையிலும் காணப்பட்டிருந்தன. அத்தகைய நிலையில் அவர்களுடன் சேர்த்து எவ்விதமான குற்றச்சாட்டுக்களும் இல்லாத என்னையும் நீக்கியிருந்தார். அதன் பின்னணியில் சில அமைச்சர்களும், பதவி ஆசை கொண்டிருந்தவர்களும் இருந்துள்ளார்கள். 

இவ்வாறான பின்னணியில் என்னை நிரூபிப்பதற்கு எனக்கு வேறு வழி இருந்திருக்கவில்லை. ஒவ்வொருவரிடமும்  சென்று நான் நிரபராதி என்று கூறவும் இயலாது. ஆகவே தான் உயர் நீதிமன்றத்தினை நாடினேன். உயர் நீதிமன்றை துணிந்து நாடியதன் மூலமே நான் எவ்விதமான தவறுகளையும் இழைக்கவில்லை என்பது வெளிப்படுவதற்கு போதுமானதாக இருக்கின்றது.

கேள்வி:- ஆனால் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் வழக்கினை மீளப்பெற வேண்டும் என்று தீர்மானித்து விட்டீர்களே?

பதில்:- விக்கினேஸ்வரனைப் பொறுத்தவரையில் அவர் நேர்மையானவர். நடுநிலையாக செயற்படும் ஒருவர். நியாயமாகச் செயற்படக்கூடிய ,பேசக்கூடிய ஒருவர். ஆனால் அரசியல் ரீதியாகவும், நிருவாக ரீதியாகவும் அவரிடத்தில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன.  தற்போது கூட தமிழர்கள் சார்பில்  அவர் பாராளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்றன. அவருக்கு எதிராக எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன. 

அவ்வாறானதொரு தருணத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் அவருக்கு நெருக்கடிகள் ஏற்பட்டால் அவர் மீதான நெருக்கடிகள் மேலும் அதிகரிக்கும் என்ற நிலைமைகளே அதிகமாக இருந்தது. ஆகவே அத்தகைய ஒருவருக்கு என்னால் பிரச்சினைகள் ஏற்படுவதை விரும்பவில்லை.  எமது இனத்திற்காக உரிமையுடனும், உறவுடனும் செயற்படும்ஒருவரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது. 

அத்துடன்  விக்கினேஸ்வரன் நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை. அதன் பின்னர் நிரந்தரமாக விடுக்கப்பட்ட உத்தரவையும் அவர் செயற்படுத்தவில்லை. மேலும் தீர்ப்பு அறிவிக்கப்பட்டிருந்தால் விக்கினேஸ்வரனுக்கு மேலும் நெருக்கடிகள் அதிகரித்திருக்கும் நிலையே இருந்தது.  

கேள்வி:- தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே வழக்கினை மீளப் பெற்றமை மூலமாக உங்களை எவ்வாறு நியாயப்படுத்த முடியும் என்று கருதுகின்றீர்கள்?

பதில்:- வழக்கினை மீளப் பெற்றமை என்பது இன்று நேற்று கூறும் விடயம் அல்ல. என்னை அமைச்சர் வாரியத்திலிருந்து நீக்கியதன்  பின்னதாக  நடைபெற்ற  வட மாகாண சபையின் அமர்வில் நான் ஆற்றிய உரையில் மிகத்தெளிவாக கூறியுள்ளேன். என்னை அமைச்சரவையிலிருந்து நீக்கியமை தவறு என்பதோடு அதனை உணர்த்துவதற்காகவே  நீதிமன்றை நாடியுள்ளேன். நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக எனக்கு மீள அமைச்சுப்பதவியை வழங்கி அதன் பின்னர் என்னை முறையாக பதவி விலகும்படி கோரினால் உடனடியாக அதனை செய்வதற்கு தயாராகவே உள்ளேன் என்றும் கூறியுள்ளேன். இந்த விடயங்களை நான் சபையில் கூறியமைக்கான பதிவுகள் வடமாகாண சபையின் ஹன்சார்ட்டில் காணப்படுகின்றன. 

அதேநேரம், தற்போதைய அரசியல் சூழலை கருத்திற்கொண்டு பல தரப்பட்ட தரப்பினரும் என்னிடத்தில் வழக்கினை மீளப்பெறுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்கள். அவர்களின் கருத்துக்களையும் நான் சீர்தூக்கிப் பார்த்தேன். அதுமட்டுமன்றி நிகழ்வொன்றுக்கு நானும் எனது மகனும் சென்றிருந்தபோது நீதியரசருக்கு எதிரான வழக்கு தொடர்பில் என்னுடன் சிலர் கலந்துரையாடினர். இதனைக் கேட்டுக்கொண்டிருந்த எனது மகன், விக்கினேஸ்வரன் சிறைசெல்வதை தான் விரும்பவில்லை உடனே  வழக்கினை மீளப் பெறுங்கள் என்று கூறியிருந்தான். எட்டு வயதாக இருக்கின்றபோதும் அவனுடைய கருத்துக்களும் என்னை ஆழமாகச் சிந்திக்க வைத்தது. 

அதனடிப்படையிலேயே வழக்கினை மீளப்பெறும் தீர்மானத்தினை எடுத்திருந்தேன். 

கேள்வி:- வழக்கினை மீளப்பெறுவதற்கு முன்னதாக நான்கு நிபந்தனைகளை நீங்கள் விதித்ததாகக் கூறப்படுகின்றதே? 

பதில்:- நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தாக்கல் செய்த நாள் முதல் எத்தனையோ சந்தர்ப்பங்களில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதற்கான சந்தர்ப்பங்களும் காணப்பட்டன. ஆனால் விக்கினேஸ்வரன் தரப்பில் சாதகமான சமிக்ஞைகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது நான் வழக்கினை தாக்கல் செய்திருந்தாலும், அது நீதிமன்ற விடயதானங்களில் ஒன்றாக மாறிவிட்டது. இதனால் நாங்கள் வழக்கினை மீளப்பெறுவது என்று மன்றுக்கு அறிவிக்கின்றபோது அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிபதிகள் அறிவித்தால் பின்னர் நிலைமைகள் எமது கையைவிட்டுச் சென்றுவிடும். அதன் காரணமாகவே வழக்கினை மீளப் பெறுவதற்கான விண்ணப்பம் பிரதிவாதிகள் பக்கத்திலிருந்து வரவேண்டும் என்பது உள்ளிட்ட நான்கு நிபந்தனைகளை முன்வைத்திருந்தோம். 

மேலும், இந்த விடயங்கள் தொடர்பில் விக்கினேஸ்வரன் தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டிருந்தபோதும் அது சரியாக அவருடைய சிரேஷ்ட சட்டத்தரணி கனக ஈஸ்வரனுக்கு சென்றடைந்திருக்கவில்லை. அதன்காரணமாகவே முதன் நாளில்  நாம் வைத்த நிபந்தனைகளை அவர் ஏற்றுக்கொள்ள முடியாது விசாரணைக்குச் செல்வோம் என்று கூறிவிட்டார். எனினும் அன்றைதினம் நள்ளிரவைத் தாண்டி விக்கினேஸ்வரன் தரப்புடன் அனைத்து விடயங்களும் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக நானும்,விக்கினேஸ்வரனும் தொலைபேசி ஊடாக உரையாடியிருந்தோம். எட்டப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைவாக மறுதினம் வழக்கு மீளப்பெறப்பட்டது. 

கேள்வி:- உங்களுடைய வழக்கில் சாட்சியமளிப்பதற்காக நான்கு தடவைகளுக்கு மேல் அரச அதிகாரிகள் சமுகமளித்திருக்கின்றார்களே? 

பதில்:- ஆம், வழக்கில் சில விடயங்களை தெளிவு படுத்துவதற்கு அரச அதிகாரிகளின் வகிபாகம் இன்றியமையாதவொன்றாக இருந்தது. அவர்களிடத்திலிருந்த ஆவணங்கள் மிகவும் அவசியமானவையாக இருந்தன. அந்த அடிப்படையில் தான் அவர்கள் வழக்கில் சாட்சியங்களாக வந்திருந்திருந்தர்கள். அவர்கள் தமது காலத்தினை இந்த வழக்கிற்காக செலவழித்தமைக்காக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும் அந்த அதிகாரிகளும் இந்த வழக்கினை சுமூகமாக நிறைவு செய்துகொள்வதையே அதிகளவில் விரும்பியிருந்தார்கள். அதற்கான வெளிப்பாடுகளையும் என்னிடத்தில் செய்திருந்தார்கள். 

கேள்வி:- விக்கினேஸ்வரனுடன் தற்போது ஏற்பட்டுள்ள இணக்கமும் புரிதலும் எதிர்வரும் காலத்தில் இணைந்த பயணத்திற்கு வழி கோலுமென்று கொள்ளலாமா?

பதில்:- என்னைப்பொறுத்தவரையில் தற்போது மிகவும் நெருக்கடியானதொரு சூழல் ஏற்பட்டிருக்கின்றது. தென்னிலங்கை ஒருமித்து எமக்கு எதிரான செயற்பாடுகளை முழுவீச்சில் மேற்கொள்ள ஆரம்பித்திருக்கின்றது. ஆகவே எமது மக்களின் பாதுகாப்பையும், இருப்பையும் உறுதிப்படுத்துவதோடு உரிமைகளுக்காக உறுதியான நிலைப்பாட்டுடன் குரல்கொடுக்க வேண்டியுள்ளது. இதற்காக தமிழர்களின் அரசியல் தரப்புக்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது. எமக்குள் பிரிவுகளை ஏற்படுத்தி நிற்காது ஓரணியாக பலமான இருப்பதன் ஊடாகவே தென்னிலங்கையின் சவால்களுக்கு முகங்கொடுக்க முடியும். ஆகவே  கூட்டமைப்பு  உட்பட அனைத்து  தரப்பினரும் ஓரணியாக இருப்பதையே  நான் விரும்புகின்றேன். அதற்குரிய செயற்பாடுகளையே தற்போது முன்னெடுக்கவிருக்கின்றேன். 

அதேநேரம், முன்னாள் போராளிகளையும் ஒன்றிணைத்து தமிழ்த் தேசியத் தரப்புக்களுடன் பயணிக்க வேண்டும் என்றும் விரும்புகின்றேன். அவர்களுக்குரிய அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றேன். ஆகவே தமிழ்த்தரப்புக்கள் அவர்களுக்கான அங்கீகாரத்தினை வழங்க வேண்டும். அதற்காக எனக்கான ஒதுக்கீட்டை வழங்கவும் தயராகவே உள்ளேன். அவர்களுக்குரிய அங்கீகாரம் மறுக்கப்படும் பட்சத்தில் அவர்களை ஒருங்கிணைத்து தனியாக பயணிப்பதற்கும் தயங்கப்போவதில்லை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04