ராமேஸ்வரம் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து பாம்பன் கடல் வழியாக இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் உலர்ந்த மஞ்சள் அடங்கிய 22 பொதிகள் நடுக்கடலில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் மூன்று மீனவர்களையும் கைது செய்துள்ளதாக  இந்திய கரையோர பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு  பறிமுதல் செய்யப்பட்ட 22 பொதிகளில் சுமார் 800 கிலோ கிராம் கடல் அட்டைகளும், 400 கிலோ கிராம்  உலர் மஞ்சளும் இருந்ததாகவும் இவற்றின் பெருமதி சுமார் 20 லட்சம் இந்திய ரூபா வரை இருக்கலாம் எனவும் கடலோர பொலிஸ் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாம்பன் பாலம் கடல் வழியாக வெளி மாவட்ட படகு ஒன்றில் இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக இந்திய கடலோர பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குந்துக்கால் கடற்கரையில் இன்று காலை முதல் ரோந்து பணியில் ஈடுபட்ட இந்திய கரையோர பொலிஸார், பாம்பன் குந்துகால் கடலில்  படகு ஒன்று இயந்திரப் பழுதாகி நின்று கொண்டிருந்ததையடுத்து படகில் இருந்த மீனவர்களிடம் விசாரணை நடத்தியத்தியுள்ளன்.

 மீனவர்கள் முன்னுக்கு பின் முறனாக பதில் அளித்ததையடுத்து சந்தேகம் அடைந்த பொலிஸார் படகினை சோதனை செய்த போது படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக 22 பொதிகளில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் சமையல் மஞ்சள் ஆகியவை  மறைத்து வைத்திருந்தமை தெரிய வந்துள்ளது.

பின்னர் மீனவர்களிடம்  நடத்திய விசாரணையில் குறித்த படகிகு தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து இலங்கைக்கு கடல் அட்டைகளும், உலர்  மஞ்சளும் கடத்தி  வந்த நிலையில்  நடுவழியில் எஞ்சின் பழுது காரணமாக நடுக்கடலில் தத்தளித்து நின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து படகில் இருந்த மூன்று மீனவர்களை கைது செய்த பொலிஸார், கடல் அட்டைகள் மற்றும் உலர்  மஞ்சள் அடங்கிய மூடைகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.