வொஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு 'ரைசின்' என்ற கொடிய விஷப் பொருள் தடவப்பட்ட கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனினும் வெள்ளை மாளிகையை சென்றடைவதற்கு முன்பாகவே, வழமையான சோதனையின்போது அந்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வொஷிங்டனின் பெயரிடப்படாத சட்ட அமுலாக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகங்கள் சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

உயிருக்கு அச்சுறுத்தலான 'ரைசின்' விஷத்தை அடையாளம் காண கடிதம் மீது இரு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் சி.என்.என். செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

பெயரிடப்படாத சட்ட அமலாக்க அதிகாரியை மேற்கோள் காட்டி, தி நியூயோர்க் டைம்ஸ், அண்மைய நாட்களில் வெள்ளை மாளிகைக்கும் அமெரிக்க மாநில டெக்சாஸில் உள்ள கூட்டாட்சி அமைப்புகளுக்கும் கடிதங்கள் இவ்வாறான கடிதங்கள் அனுப்பப்பட்டதாக சுட்க்காட்டியுள்ளது.

இந் நிலையில் வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ள மேற்படி கடிதம் கனடாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் பெண்ணொருவரை சந்தேக நபராக அடையாளம் கண்டுள்ளதாகவும் புலனாய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில்,  மேலும் இதுபோன்ற கடிதங்கள் அஞ்சல் செய்யப்பட்டுள்ளதா என்று புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருவதாகவும் டைம்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

ரைசின் என்பது ஆமணக்கு விதைகளில் காணப்படும் ஒரு விஷம் என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையங்கள் தனது இணையதளத்தில் பதிவிட்டுள்ளது.