(எம்.மனோசித்ரா)


நாட்டின் சில பிரதேசங்களில் கடும் மழை பெய்யக் கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மாத்தளை, கண்டி, கம்பஹா, கேகாலை, நுவரெலியா, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் 100 - 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதே வேளை வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில பிரதேசங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் , மத்திய மலைப்பிரதேசங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 - 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ , மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஏனைய சில மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் மழை பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.


வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 - 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும். முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், புத்தளம், பொலன்னறுவை, குருணாகல், மாத்தளை, கம்பஹா, கேகாலை, கண்டி, கொழும்பு, இரத்தினபுரி, நுவரெலியா, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு பலமான காற்றும் வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கற்பிட்டி தொடக்கம் பொத்துவில் வழியாக கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டைக்கு உட்பட்ட கடற்பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 - 3 மீற்றர் வரை உயர்வடையக் கூடும் என்பதால் மீனவர்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.