(க.பிரசன்னா)

22 ஆவது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் கண்காட்சி அரங்கில் இன்று 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 

அரசாங்கத்தின் சுகாதார விதிமுறைகளை பின்பற்றியும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியிலும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. 

புத்தக கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள் மற்றும் கிராமியச் சிற்பக் கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். 

நிகழ்வில் முகக்கவசம் அணிவதும் கைகளை சுத்தப்படுத்துவதும் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

194 புத்தக நிலையங்களின் புத்தகங்கள் இங்கு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. 1999 ஆம் ஆண்டு தேசிய கலை அரங்கில் 28 புத்தக விற்பனை நிலையத்துடன் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச புத்தக கண்காட்சி இன்று பாரிய வளர்ச்சியை கண்டிருக்கின்றது.

'கொரோனா வைரஸ் நிலைமையின் காரணமாக கடந்த வருடத்தினை விட இவ்வருடம் மக்களின் வருகை மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. பாதுகாப்பும் கடுமையாக பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆங்கில புத்தகங்கள் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றது. அரசாங்கத்தின் சுகாதார விதிமுறைகளில் முகக்கவசம், காசாளர்கள் கையுறை அணிதல் மற்றும் புத்தக விற்பனை அறையில் பணியாற்றுபவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தங்களை சுத்தப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக' ஜெயா புத்தகசாலையின் விற்பனைக்கூட பொறுப்பாளர் ரூபன் தெரிவித்தார்.

194 புத்தக நிலையங்களின் காட்சி கூடங்கள் இங்கு அமைக்கப்பட்டிருந்தாலும் தமிழ் புத்தக காட்சிக்கூடங்கள் ஐந்து வரையிலேயே காணப்படுகின்றது. தமிழ் புத்தக விற்பனைக்கூடங்களின் குறைவுக்கு தமிழ் வாசகர்களின் குறைவான வருகையும் ஒரு காரணமாக கூறப்படுகின்றது. இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் நியமத்தின்படி கொள்வனவு செய்யப்படுகின்ற புத்தகங்களுக்கு 20 வீத விலைக்கழிவுகள் வழங்கப்படுகின்றன. கண்காட்சி மண்டபத்தில் ஒரு காட்சிக்கூடத்தை அமைப்பதற்கு அண்ணளவாக 130,000 ரூபா வரையிலும் செலவு செய்ய வேண்டிய தேவை புத்தக விற்பனையாளர்களுக்கு இருக்கின்றது. இதை விடவும் பணியாளர்களுக்கான செலவு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் என அதிகளவு செலவு ஏற்பட்டாலும் அதனை ஈடுசெய்வதற்குரிய வகையிலான வருமானத்தைப் பெற்றுக்கொள்வதே தமிழ் புத்தக விற்பனையாளர்களுக்கு சவாலாக அமைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் நிகழ்வு ஆரம்பித்தது முதலே அதிகமான வாசகர்கள் வருகைத்தந்திருந்த நிலையில் இம்முறை அந்நிலைகுறைவாக காணப்பட்டாலும் எதிர்வரும் நாட்களில் இந்நிலைமை மாறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தோடு மழையுடன் கூடிய காலநிலையும் விற்பனையை பாதிப்பதாக அமைந்திருக்கின்றது. நிகழ்வில் சமூக இடைவெளியை பேணுவதற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தாலும் அவற்றை செயற்படுத்திக் கொள்வது பாரிய பிரச்சினையாக இருப்பதாக காட்சிக்கூட பொறப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தெற்காசியாவில் மிகப்பெரிய புத்தக கண்காட்சியாக காணப்படும் கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இலங்கை வெளியீட்டாளர்கள் மட்டுமல்லாது, இந்தியா, மலேசியா, சீனா, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் வெளியீட்டாளர்களும் கலந்து கொள்கின்றனர். தற்போதைய சூழ்நிலையின் காரணமாக வெளிநாட்டு புத்தக விற்பனைக்கூடங்கள் இலங்கை முகவர்களால் முகாமைத்துவம் செய்யப்படுகின்றன. 22 ஆவது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளதுடன், இலங்கை புத்தக விற்பனையாளர், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர் சங்கம் மற்றும் சமஸ்த லங்கா புத்தக விற்பனையாளர் சங்கம் என்பன இணைந்து செயற்படுத்தி வருகின்றன.