பீபா கால்பந்து தரவரிசையில் கடந்த ஐந்து மாதங்களாக எந்தவித மாற்றமும் இல்லாமல் பெல்ஜியம் தொடரந்து முதல் இடத்தை வகிக்கிறது. 211 நாடுகள் அங்கம் வகிக்கும் பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் இலங்கை 206 ஆவது இடத்தில் உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து கால்பந்து போட்டிகள் நடைபெறவில்லை. தற்போது கழக மட்ட கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்றன.

இதனால் சர்வதேச அணிகளுக்கிடையிலா தரவரிசை கடந்த ஐந்து மாதங்களாக வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று (17)  தரவரிசை வெளியிடப்பட்டது. இதில் பெல்ஜியம் தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறது. பிரான்ஸ் 2 ஆவது இடத்தையும், பிரேஸில் 3 ஆவது இடத்தையும், இங்கிலாந்து 4 ஆவது இடத்தையும், போர்த்துக்கல் 5 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. இதில் ‘ஐரோப்பா நேசன்ஸ்’  போட்டித் தொடரில் சிறப்பாக விளையாடிய போர்த்துக்கல் இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளது. 6 முதல் 10 வரையான இடங்களில் முறையே உருகுவே, ஸ்பெய்ன், குரேஷியா, ஆர்ஜென்டீனா, கொலம்பியா ஆகிய அணிகள் காணப்படுகின்றன.

உலக வரிசையில் ஆசிய அணிகளில் ஜப்பான் 28 ஆவது இடத்திலும், ஈரான் 30 ஆவது இடத்திலும், தென் கொரியா 39 ஆவது இடத்திலும் உள்ளன. உலகக் கிண்ணத்தை நடத்தவுள்ள கட்டார் 55 ஆவது இடத்திலும் உள்ளது.  

தெற்காசிய வலய நாடுகளான இந்தியா 109 ஆவது இடத்திலும், ஆப்கானிஸ்தான், 149 ஆவது இடத்திலும்,மாலைத்தீவுகள் 155 ஆவது இடத்திலும், நேபாளம் 170 ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 187 ஆவது இடத்திலும், பூட்டான் 189 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 200 ஆவது இடத்திலும், இலங்கை 206 ஆவது இடத்திலும் உள்ளன.