(நா.தனுஜா)

பயங்கரவாத செயற்பாடுகள், அடிப்படைவாதப்போக்கு, குற்றச்செயல்கள், போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றைத் தடுப்பதில் இலங்கையுடன் ஒன்றிணைந்து பணியாற்ற எதிர்பார்த்திருப்பதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்திருக்கிறது.

படம்

இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் எம்.அஷ்ரப் ஹைதாரி கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெடென்னேவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இச்சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தூதரகத்தினால் செய்யப்பட்டிருக்கும் டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக இச்சந்திப்பின் போது கடற்பாதுகாப்பு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாகத் தெரிவித்திருக்கும் தூதரகம் பயங்கரவாத செயற்பாடுகள், அடிப்படைவாதப்போக்கு, குற்றச்செயல்கள், போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றைத் தடுப்பதில் இருநாடுகளும் எவ்வாறு ஒன்றிணைந்து பணியாற்ற முடியும் என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகக் கூறியிருக்கிறது.

படம்

மேலும் யாழ்ப்பாணத்திற்கான தனது விஜயத்தின்போது கடற்படையினரால் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளுக்கு நன்றி தெரிவித்த அஷ்ரப் ஹைதாரி, எதிர்வரும் காலங்களிலும் இருநாடுகளுக்கும் பொதுவான பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார். 

படம்