(இராஜதுரை ஹஷான்)

 அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த்ததை எதிர்தரப்பினரால் பாராளுமன்றில் தோற்கடிக்க  முடியாது. நாட்டு மக்கள் துரதிஷ்டவசமாக  அரசாங்கத்துக்கு  மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளார்கள்.  ஆகவே  20 ஆவது திருத்தத்திற்கு எதிராக மக்களின் எதிர்ப்பை பலப்படுத்தவே முயற்சிக்கிறோம்.

  சர்வதேச நாடுகளை பகைத்துக் கொண்டு தனித்து  அரசாங்கத்தால் செயற்பட முடியாது. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தினால் ஜனநாயக நாடுகள் இலங்கையை  புறக்கணிக்கும் நிலை  ஏற்படலாம்  என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

  கொழும்பில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

  அரசியலமைப்பின்  20 ஆவது திருத்தம் சர்வாதிகாரமான ஆட்சிக்கு  செல்லும்   மார்க்கத்தை காண்பித்துள்ளது.      வர்த்தமானியில் வெளியிடப்பட்ட சட்ட மூல வரைபு  தொடர்பில்  பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்தார்கள். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ   வெளியான திருத்தத்தை மீளாய்வு செய்ய 9  பேர் அடங்கிய குழுவை நியமித்தார். 20 ஆவது திருத்தத்தின் குறைப்பாடுகள் திருத்தம் செய்யப்பட்டு குழுவினர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள்.

  பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையினை ஜனாதிபதி பொருட்படுத்தவில்லை.  வர்த்தமானியில் வெளியிடப்பட்ட   20 ஆவது திருத்த மூலவரைபு எவ்வித மாற்றங்களுமின்றி நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி உறுதியாக குறிப்பிட்டுள்ளார். தவறினை  தைரியமாக  சுட்டிக்காட்ட முடியா நெருக்கடியான நிலைக்குள் ஆளும் தரப்பினர் தள்ளப்பட்டுள்ளார்கள்.

  அரசியலமைப்பின்  20 ஆவது திருத்ததை எதிர் தரப்பினரால் பாராளுமன்றில் தோற்கடிக்க முடியாது. துரதிஷ்டவசமாக    அரசாங்கத்தின் வசம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் காணப்படுகிறது. மக்களும் போலியான  வாக்குறுதிகளுக்கு ஏமாற்றமடைந்து அரசாங்கத்தை  ஆதரித்தார்கள். இதன் விளைவுகளை தற்போது உணர்ந்துக் கொண்டுள்ளார்கள்.

  ஜனநாயகத்தை பாதுகாக்கும் பல ஏற்பாடுகள் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ள போது அரசாங்கம் பொறுப்பற்ற விதமாக கருத்துரைக்கிறது. சர்வதேசத்தை பகைத்துக் கொண்டு நாடு என்ற ரீதியில் தனித்து செயற்பட முடியாது.

  அரச வருமானம், செலவினங்களை ஜனாதிபதியால் எவ்வாறு நிர்வகிக்க முடியும். முறையற்றசெயற்பாடுகளுக்காகவே   கணக்காளர் நாயகம் ஆணைக்குழு இரத்து செய்யப்பட்டுள்ளது.  

 20 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால்  ஜனநாயக நாடுகள் இலங்கையை புறக்கணிக்கும் நிலை ஏற்படும்  ஆகவே நாட்டு மக்கள் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் முதலில் தெளிவுப் பெற்று அரசியல் கட்சி  ஆதரவினை புறம் தள்ளி நாட்டுக்காக   ஒன்றுப்பட வேண்டும்.  என்றார்.