பிரபல பாதாள குழு தலைவரான மாக்கந்தரை மதுஷின் சகாவான பாதாகொட ஆமி சிவா சட்ட விரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் உள்ளிட்ட ஆயதங்களோடு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட மாக்கந்துரை மதுஷின் சகாவான போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபரான பாதாகொட பூஷியா என்பவரிடம் முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான விசாரணைகளில் கிடைக்கப்றெற தகவலுக்கமையவே ஆமி சிவா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதாகொட  பகுதியில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்  கைது  செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து போர 12 ரக வெளிநாட்டு துப்பாக்கி 1, வெளிநாட்டு கைக்குண்டு 1, 9 மில்லிமீற்றர் அளவிலான துப்பாக்கி ரவைகள் 7, டீ 56 ரக துப்பாக்கி ரவைகள் 5, போர 12 ரக துப்பாக்கி ரவைகள் 5, வாள்கள் 2, இராணவ தற்பாதுகாப்பு அங்கி , வாயு முகக்கவசம் , சய்னைட் குப்பி, 3 கிராம் 23 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், சாதாரண சீருடைகள்  அடங்கிய பொதி , இராணுவ சீருடைகள் அடங்கிய பொதி, வரைப்படங்கள் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான ஆவண கோப்புகள் 3  ஆகியவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.