தனது அவதானத்தின்படி நாட்டில் உள்ள பொதுவான பிரச்சினை எவரும் தமது பணிகளை சரிவர செய்யாதிருப்பதாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, அரச, தனியார் துறைகளில் காணப்படுகின்ற மந்தகதியிலான செயற்பாடுகள் கவலைக்குரிய விடயமாகும் என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பு மற்றும் மக்கள் செறிந்து வாழ்கின்ற நகரங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிர்மாணப் பணிகள் எப்போதும் ஒரே அளவில் இருப்பதை உதாரணமாக குறிப்பிடலாம் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

ஆரம்பிக்கப்பட்டுள்ள அனைத்து நிர்மாணப் பணிகளையும் உடனடியாக நிறைவு செய்ய வேண்டுமென்று குறிப்பிட்ட ஜனாதிபதி, உளப்பாங்கு மாற்றத்துடன், அபிவிருத்தி புரட்சிக்கு தயாராக வேண்டுமென்று அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டார்.

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருள்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்.

“அனைத்து குடும்பங்களுக்கும் வசதியான வீடு” பெற்றுக்கொடுப்பது “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் எதிர்பார்ப்பாகும். வீடொன்றின் தேவை இருந்தாலும் அதனை தனியாக நிறைவு செய்துகொள்ள முடியாமை பெரும்பாலனவர்களுக்கு உள்ள பிரச்சினையாகும்.

நகர, கிராமிய மற்றும் தோட்ட மக்களின் வீட்டுத் தேவையை தீர்க்க வேண்டியது அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடையும் வகையிலேயாகும் என்று ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

“உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எண்ணக்கருவை அடிப்படையாகக்கொண்டு தனது அமைச்சு ஏற்கனவே கிராம சேவையாளர் பிரிவுகள் ரீதியாக குறைந்த வருமானமுடையவர்களுக்கு 14022 வீடுகளை நிர்மாணித்து வருவதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த குறிப்பிட்டார். இத்திட்டத்தின் கீழ் ஐந்து வருடங்களில் 70,100 வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 05 ஆம் திகதி கொண்டாடப்படுகின்ற உலக குடியிருப்பு தினத்திற்கு இணையாக “சிறந்த தொடர்மாடி வீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின்” கீழ் வெரெல்லவத்த, மிஹிந்துபுர, பறங்கியா கும்புர, தஹய்யாகம, மத்தேகொட, சொய்சாபுர மற்றும் தங்கல்ல நகரை மையப்படுத்திய வகையில் 1500 வீடுகளை நிர்மாணிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இந்திக்க அனுருத்த மேலும் குறிப்பிட்டார்.

அனைத்து நிர்மாணப் பணிகளுக்கும் அரச, தனியார் இருதரப்பினரையும் இணைத்துக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றி ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

வீட்டை கொள்வனவு செய்வதற்கு 6.25 வீத வருடாந்த வட்டி வீதத்தில் 30 வருட காலத்திற்குள் செலுத்தும் வகையில் அரச வங்கி மூலம் கடன் வழங்குவதற்கு பொறி முறை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. 

மத்திய வகுப்பினரின் வருமானத்திற்கு ஏற்ற தொடர்மாடி வீடுகளை நிர்மாணிப்பதற்கு அவசியமான காணிகள் அமைச்சுக்கு இலவசமாக வழங்கப்படுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வட மாகாணத்தில் நலன்புரி 22 முகாம்களில் வாழ்கின்ற 409 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்து மீண்டும் உடனடியாக அவர்களை குடியேற்றுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

நாடு பூராகவும் ஐந்து இலட்சத்து இருபத்தாராயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மலசலகூட வசதி இல்லை என்று சுட்டிக்காட்டிய பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ அவர்கள், சுகாதார வசதிகளை வழங்குவதை துரிதப்படுத்துமாறு குறிப்பிட்டார்.

பழைய தொடர்மாடி வீட்டுத் தொகுதிகளில் உள்ள கழிவகற்றல் கட்டமைப்பை புனர்நிர்மாணம் செய்ய வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் இந்திக குறிப்பிட்டார். 

கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தை மீண்டும் புதுப்பொழிவுடன் இயங்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  குறிப்பிட்டார்.

கூட்டுத்தாபனத்தின் பிரதேச கிளைகளை கட்டிடப் பொருட்களை விநியோகிக்கின்ற முகவராக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார்.

கட்டிட திணைக்களம், அரசாங்க தொழிற்சாலைகள், திணைக்களம், தேசிய இயந்திர சாதனங்கள் நிறுவனம், அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்துறை கூட்டுத்தாபனம், அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனம் மற்றும் நிர்மாணத் தொழில் அபிவிருத்தி அதிகார சபை போன்ற நிறுவனங்களின் தற்போதைய நிலைமை மேலும் அவற்றை அபிவிருத்தி செய்வதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

நிர்மாணத்துறை, விவசாயம் மற்றும் விளையாட்டுத்துறைகளில் மறுமலர்ச்சியை எதிர்வரும் வருடத்திலிருந்து எதிர்பார்ப்பதனால் இந்த அனைத்து நிறுவனங்களும் உத்வேகத்துடன் சேவைகளை வழங்க வேண்டுமென்று பெசில் ராஜபக்ஷ தெளிவுபடுத்தினார்.

வீடுகள், வீதிகள், பாலங்கள் மற்றும் குளங்கள் அதிக எண்ணிக்கையில் நிர்மாணிப்பதற்கும் புனர்நிர்மாணம் செய்வதற்கும் அரசு திட்டமிட்டுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் நிறுவனங்களை நிர்மாணப் பணிகளுக்கு இணைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

ஜனாதிபதியின் செயலாளர் பீ்.பி.ஜயசுந்தர, அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், துறைசார் நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் நிர்மாணத்துறை ஊழியர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.