கொரோனா பரவலைத் தடுக்க, சமூக இடைவெளி தீர்வாகாது என ஐக்கிய நாடுகள் சபையின்  75ஆவது பொதுச்சபை கூட்டத்தின் தலைவர், வோல்கன் போஸ்கிர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நேற்று முன்தினம் ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆவது பொது கூட்டத்திலேயே வோல்கன் போஸ்கிர் இதனைக் கூறினார்.

 ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆவது ஆண்டு திட்டங்கள் அனைத்தும், கடந்த ஆறு மாதங்களில், கொரோனா பரவலால் மாறிவிட்டன.

எத்தகைய அச்சுறுத்தலில் நாம் உள்ளோம் என்பதை, முகக்கவசங்கள் உணர்த்துகின்றன.

இதில் நாம் ஒன்றுபட்டு இருக்கிறோம் என்பதையும் நினைவு படுத்துகின்றன.

எனினும், சில நாடுகள், பன்னாட்டு அமைப்புகளை தூற்றுவதும், உலக நாடுகள் எதற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கேள்வி கேட்பதையும், நாம் பார்க்கிறோம்.

இத்தகைய சர்ச்சைகள் எழக் காரணங்கள் உண்டு.

ஆனால், அவை மூலம் தவறான முடிவுகள் எடுக்கப்படுவது சரியானது அல்ல.

எந்த நாடும் தனியாகவோ அல்லது சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் மூலமாகவோ, கொரோனாவை ஒழித்து விட முடியாது.

தனித்து செயல்படுவது, கொரோனா பரவலை அதிகரிக்கவே உதவும்.

எனவே உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே, பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.