( எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், சினமன் கிராண்ட் ஹோட்டலில் குண்டினை வெடிக்கச் செய்த இன்சாப் அஹமட் எனும் குண்டுதாரியின் வீட்டை, போலி உறுதிப் பத்திரங்களை தயாரித்து கையகப்படுத்த முயன்றதாக கூறப்படும் சட்டத்தரணி ஒருவர் உட்பட 5 சந்தேக நபர்களைக் கைது செய்து தடுத்து வைத்து சி.ஐ.டி. விசாரித்து வந்த நிலையில்,  அவர்கள் நேற்று 17 ஆம் திகதி நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். 

இதன்போது சந்தேக நபர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சினமன் கிராண்ட் நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற குண்டுத் தக்குதல்கள் குறித்து இடம்பெறும் விசாரணைகளின் போது கிடைக்கப் பெற்றிருந்த தகவல் ஒன்றினை மையப்படுத்தி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விஷேட விசாரணைப் பிரிவு அறை இலக்கம் 3 இன் பொறுப்பதிகாரி, பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் தீபானி மெனிகே தலைமையிலான குழுவினர் இந்த சந்தேக நபர்களைக் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.