(நா.தனுஜா)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டுள்ள பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் எதிர்வரும் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் தயாரிக்கப்படவிருப்பதுடன், 2021 இற்கான ஒதுக்கீட்டுச்சட்டமூலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.

2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தைத் தயாரிக்கும்போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய கொள்கைகளை பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையில் முன்வைத்திருக்கிறார்.

அவரால் முன்வைக்கப்பட்டுள்ள கொள்கைகளில் சுபீட்சமான எதிர்காலத்தை நோக்காகக் கொண்ட அரசாங்கத்தின் கொள்கைப்பிரகடனத்தின் மூமலாக எதிர்பார்க்கப்பட்டுள்ள பெறுபேறுகளை அடைவதற்குத் தேவையான வளங்களை ஒதுக்கீடு செய்தல், அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள விடயதானங்களுக்கு அமைவாக அவற்றின் இலக்கை அடைந்துகொள்வதற்கு அவசியமான வளங்களை ஒதுக்கீடு செய்தல், அனைவருக்கும் குடிநீரை வழங்குதல், முழுநாட்டை உள்ளடக்கிய வகையில் ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதியைப் புனரமைத்து மேம்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல், நீர்வளம் மற்றும் நீர்ப்பாசனத்துறைகளுக்கு முக்கியத்துவம் வழங்குதல் ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் 2021 ஆம் ஆண்டிற்குள் அரசாங்கத்தின் வருமானம் 2021 ஆம் ஆண்டிற்குள் தேசிய உற்பத்தியில் 10.2 சதவீதமாக அமையும் என்று மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாகவும் இதன்கீழ் செலவை முகாமைத்துவம் செய்யும் நடைமுறையை முன்னெடுத்து வர்த்தக நடவடிக்கைகள் வெற்றி பெறுவதற்கு அவசியமான சூழ்நிலையை உருவாக்கி அரச முதலீட்டு வேலைத்திட்டத்திற்கான வளங்களை ஒதுக்கீடு செய்தல், அரசாங்க பணிகளை டிஜிட்டல் மயப்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குதல், குறைந்த வளங்களைப் பயன்படுத்தி மிகவும் பயனுள்ள பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தற்போது காணப்படும் நடைமுறைகளை மதிப்பீடுசெய்து பரந்துபட்ட நடைமுறையில் ஈடுபடுவது குறித்து கவனம் செலுத்துதல் ஆகியவையும் பிரதமரால் முன்வைக்கப்பட்டுள்ள கொள்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக 2021 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச்சட்டமூலத்தை எதிர்வரும் அக்டோபர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மேற்குறிப்பிட்ட கொள்கைகளின் அடிப்படையில் இந்த ஒதுக்கீட்டுச்சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.