பெண்ணொருவரின் கத்திக்குத்துக்கு இலக்காகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த  ஐந்து பிள்ளைகளின் தாயொருவர், நேற்றிரவு 8.45 மணியளவில் உயிரிழந்துள்ளார் என  பொலிஸார் தெரிவித்தனர். 

இந்தச் சம்பவம், மூதூர் கிழக்கு-சேனையூர் பகுதியில்  நேற்று பிற்பகல்  இடம்பெற்றுள்ளது.

கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேனையூர் பகுதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தாயாரான இளங்குமார் சாந்தமலர் (41 வயது) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது:

கத்திக்குத்துக்கு இலக்கான குறித்தபெண், இரண்டு வருடங்களுக்கு முன்னர் பக்கத்து வீட்டுப் பெண்ணின் மகளுக்கு இரண்டு இலட்சம் ரூபாயை, வட்டிக்குக் பெற்றுக்கொடுத்துள்ளார்.

அந்தப் பணத்தை மீளச் செலுத்தாமையால் அதுதொடர்பில், பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டதில் இருந்து, பக்கத்துவீட்டுப் பெண், ஒவ்வொரு நாளும் திட்டிக்கொண்டே இருந்துள்ளார்.

இந்நிலையே இவ்விருவருக்கும் இடையில் குரோதம் வளரக் காரணமானது. இந்த விவகாரம் தொடர்பில் அன்றைய தினமும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியுள்ளது. இந்நிலையிலேயே, இந்தக் கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.