(ஆர்.யசி)

பிரதமரையும், பாராளுமன்றத்தையும் பலவீனப்படுத்தும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ள 20 ஆம் திருத்தத்திற்கு அரசாங்கத்திற்குள்ளேயே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. ஆகவே  20 ஆம் திருத்ததிற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கப்போவதில்லை என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இதில்  கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல இதனைக் கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்பட பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது. இந்த முயற்சிகள் அனைத்தின் போதும் உரிமையாளர்கள் இருந்தனர். ஆனால் 20 ஆம் திருத்தமாக கொண்டுவந்துள்ள அரசியல் அமைப்பு திருத்ததிற்கு உரிமையாளர் ஒருவரேனும் இல்லை. யார் இந்த 20 ஆம் திருத்தத்தை உருவாக்கியதென்பது தெரியாமலேயே ஒரு யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் உள்ளிட்ட எவருமே  இதற்கு பொறுபேற்க மறுக்கின்றனர். 

ஆகவே இப்போதே இவ்வாறான நிலைமை என்றால் 20 ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் என்னவாகும் என்பதை சிந்திக்க வேண்டும். அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை இருந்தாலும் கூட இவ்வாறான ஒரு  திருத்தத்தை கொண்டுவர மக்கள் ஆணை வழங்கவில்லை.

எவ்வாறு இருப்பினும் சுயாதீன ஆணைக்குழுக்கள் அனைத்தையும் இல்லாதொழித்து முழுமையாக ஜனாதிபதிக்கு சகல அதிகாரங்களையும் வழங்கவே முயற்சிக்கப்படுகின்றது. 

அரசியல் அமைப்பு சபை ஒன்றினை நிராகரிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சியில் தான் சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் சுயாதீன ஆணைக்குழுக்கள் இருந்துள்ளது. எனினும் 18 ஆம் திருத்தத்தின் மூலமாக சுயாதீன ஆணைக்குழுக்களை நீக்க ராஜபக்ஷ அரசாங்கம் நடவடிக்கை எடுதுத்தது. அதன் பின்னர் நாம் ஆட்சிக்கு வந்து 19 ஆம் திருத்தத்தை கொண்டுவந்து மீண்டும் சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்கினோம். பாராளுமன்ற அதிகாரத்தை பலப்படுத்தினோம். இன்று மீண்டும் சுயாதீன ஆணைக்குழுக்களை இல்லாது செய்து, பாராளுமன்றத்தை பலவீனப்படுத்தி நிறைவேற்று அதிகாரத்தை பலப்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கோ, தாமரை மொட்டுக் கட்சிக்கோ உறுதியாக கொள்கை ஒன்று இல்லை, சந்தர்ப்பதிற்கு ஏற்றால் போல் தமது நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்கின்றனர். இன்று அமைச்சரவைக்கு 20 ஆம் திருத்தத்தை கொண்டு சென்ற வேளையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. உறுதியான நிலைப்பாடு எதுவும் இல்லாது பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. 20 ஆம் திருத்தத்தை கொண்டுவந்தவர்கள் யார் என்பது தெரியாது அமைச்சரவை முரண்பட்டுள்ளது. பிரதமரை பலவீனப்படுத்தும், பாராளுமன்றதை பலவீனப்படுத்தும் நோக்கங்களுக்கு அரசாங்கத்தில் பலர் முரண்படுவர்.

அரசாங்கத்தின் சகல செயற்பாடுகளை முன்னெடுக்கும் போதும் மக்கள் ஆணை உள்ளதாக கூறுகின்றனர். ஆனால் நாட்டினை சர்வாதிகாரத்தின் பக்கம் கொண்டு செல்ல மக்கள் ஆணை வழங்கவில்லை. அதனை அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும். எனவே 20 ஆம் திருத்ததிற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கப்போவதில்லை. ஆளும் தரப்பில் பலரே இதனை ஆதரிக்கப்போவதில்லை. பாராளுமன்றத்தை பலவீனப்படுத்த எவரும் விரும்ப மாட்டார்கள். 19 ஆம் திருத்தத்தில் குறைபாடுகள் இருந்திருந்தால் அதனை திருத்தியிருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.