கொரோனா தொற்று காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான, அமெரிக்காவில், கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி பயன்பாட்டிற்கு அனுமதியளிக்கப்பட்டவுடன் அந்நாட்டு மக்கள் அனைவருக்கும் அடுத்த 24 மணி நேரத்தில் இலவசமாக தடுப்பூசியை விநியோகிப்பதற்கு ட்ரம்ப்  நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 

அமெரிக்காவில் கொரோனா வைரஸூக்கான தடுப்பூசி  3, 4 வாரங்களில்  தயாராகிவிடும் என ட்ரம்ப்  நேற்று அதிரடியாக  அறிவித்திருந்தார்.

Coronavirus vaccine

இந்நிலையில், தற்போது பரிசோதனை நிலையில் உள்ள கொரோனா தடுப்பூசியை  பயன்பாட்டிற்கு கொண்டுவர அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்தவுடன் தடுப்பூசிகளை மக்களுக்கு விநியோகிக்கும் பணி விரைவாக நடைபெறும் என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் சிரேஸ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் இடங்கள், தடுப்பூசியை சேமித்து வைக்கும் இடங்களை தயார் நிலையில் வைத்திப்பதற்கும்படி  இம்மாத தொடக்கத்திலிருந்து அமெரிக்காவின் மாகாணங்கள், நகரங்கள், யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அமெரிக்க அரசு பணிப்புரை விடுத்துள்ளது.

மேலும், இந்த தடுப்பூசிக்கு மக்களிடம் இருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது எனவும், மக்கள் இலவசமாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் எனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது. 

நவம்பர் 3 ஆம் திகதி அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக தடுப்பூசியை கண்டுபிடித்து மக்களுக்கு வழங்க ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.