( எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்தஞாயிறு தின தொடர்  தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பிலான விசாரணைகளை அடுத்துவரும் ஓரிரு நாட்களில் முடிவுறுத்த முடியும் என சி.ஐ.டி. நேற்று கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்தது. 

அதன்படி அவ்வாறு ஓரிரு நாட்களில் விசாரணையை நிறைவு செய்து, கோவையை சட்ட மா அதிபருக்கு அனுப்பி, அவர்களது ஆலோசனையைப் பெற்று செயற்பட எதிர்பார்ப்பதாக சி.ஐ.டி.யின் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் தீபானி மெனிகே நேற்று கோட்டை பதில் நீதிவான் சலனி பெரேராவுக்கு அறிவித்தார்.

கடந்த 2019 உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல்  21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளில், சினமன் கிராண்ட்  ஹோட்டலில் இடம்பெற்ற சம்பவத்தில் தற்கொலைதாரியாக செயற்பட்ட மொஹமட் இப்ராஹீம் இன்சாப் அஹமட் என்பவருடன் தொடர்புகளை கொண்டிருந்ததாக கூறி சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் , தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை புரிந்த சந்தேகத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

இந் நிலையில்,  அந்த சம்பவத்தை மையப்படுத்திய நீதிவான் நீதிமன்ற விசாரணையின் கீழேயே ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில் மன்றுக்கு விடயங்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று அவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

 அதன்போது ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் மன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி  கர்மான் ஹசீன்,  சட்டத்தரணிகளான ஹர்ஷன நாணயக்கார, நிரான் அங்கடெல், ஹபீல் பாரிஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் ஆஜராகியது.

 ஜனாதிபதி சட்டத்தரணி கர்மான் ஹசீன், முன்வைத்த ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பிலான கேள்விக்கு பதிலளிக்கும் போதே, சி.ஐ.டி.யினர் ஓரிரு நட்களில் விசாரணை நிறைவடையும் என அறிவித்தனர்.

 இந் நிலையில், ஏற்கனவே இந்த விவகாரத்தில்  கோட்டை நீதிவானின் அலுவலக அறையில், இரகசியமாக சிறுவர்கள் சிலர் வழங்கிய இரகசிய வாக்குமூலம் ஊடகங்களுக்கு கசிந்தது எப்படி என விசாரணை நடாத்துமாறு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அது குறித்த விசாரணைகளை சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு ஆரம்பித்துள்ளதாகவும் அடுத்த தவணையின் போது அறிக்கை சமர்ப்பிப்பதாகவும், சி.சி.டி. சார்பில் மன்றில் ஆஜரான பொலிஸ் அதிகாரி கூறினார். 

இந் நிலையில் இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 23 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டது.