ஆரோக்கியமான, ஒழுக்கநெறி கொண்ட மற்றும் சக்திமிக்க சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்காக விளையாட்டு கலாசாரம் ஒன்றை உருவாக்குவது காலத்தின் தேவையாகுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

விளையாட்டு என்பது இளைஞர் சமூகத்தின் மொழியாகும். கல்விக்கு இணையாக பிள்ளைகளை விளையாட்டில் ஈடுபடுத்துவதன் மூலம் பூரணத்துவமான மனிதனை சமூகத்திற்கு வழங்க முடியும்.

கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் அமைச்சுக்களுக்கு அதற்காக பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக இன்று (16) பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடு பூராகவும் உள்ள பாடசாலைகளில் விளையாட்டுத்துறையில் திறமைகளை வெளிக்காட்டும் பிள்ளைகளை சிறுவயது முதல் தெரிவு செய்து அவர்களுக்கு அவசியமான உரிய போசாக்கு, தேசிய மற்றும் சர்வதேச பயிற்சிகள் உள்ளிட்ட வசதிகளை வழங்கக்கூடிய நிகழ்ச்சித்திட்டங்களின் அவசியம் பற்றியும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

கிராமிய பாடசாலைகளுக்கு விளையாட்டு மைதானங்களை பெற்றுத் தருமாறு கேட்டாலும் அவற்றை அமைத்துக் கொடுத்ததற்குப் பின்னர் ஒழுங்காக பராமரிக்காத நிலை பல்வேறு இடங்களில் காணப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். 

புல் வெட்டுதல் போன்ற மிக இலகுவாக செய்யக்கூடிய பராமரிப்பு விடயங்களுக்கு பாரிய நிதி தேவையில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்களை பராமரிப்பதற்காக தனியானதொரு பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

விளையாட்டு மைதானங்களை பராமரிக்கும் இயலுமை உள்ளூராட்சி மன்றங்களுக்கு உண்டு. இரண்டு மாதங்களுக்குள் நாடு பூராகவும் உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்களையும் நேர்த்தியாக சுத்தப்படுத்தி தருமாறு பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவிடம் கேட்டுக்கொண்டார்.

கொழும்பு - 07, டொரின்டன் மாவத்தையில் அமைந்துள்ள தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தை தியகம விளையாட்டு தொகுதி வளாகத்துடன் இணைத்து சர்வதேச தரத்தைக்கொண்ட விளையாட்டு பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்.

விளையாட்டு கலாசாரம் ஒன்றை கட்டியெழுப்புவதற்காக சிறு பிள்ளகைள் விளையாடுகின்ற இடங்களை தேடிச் சென்று விளையாட்டு மைதானங்களை அமைக்க வேண்டுமென்று நாமல் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.

பிரதான விளையாட்டு மைதானங்களை ஒரு நிறுவனத்தின் கீழ் நிர்வகித்தல், முழுமையான வசதிகளைக்கொண்ட விளையாட்டுப் பாடசாலைகள் 25 ஐ உருவாக்குதல், விளையாட்டு சட்டத்திற்கு புதிய முன்மொழிவுகளை உள்ளடக்குதல் மற்றும் புதிய சட்டமொன்றை தயாரித்தல், விளையாட்டின் மேம்பாட்டிற்காக தனியார் துறையினரின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாக கடந்த மாதத்தில் தமது அமைச்சு அவதானம் செலுத்தியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்

பிரதேச ரீதியாக விளையாட்டை முன்னேற்றுதலின் அவசியம் பற்றி இராஜாங்க அமைச்சர் தேனுக்க வித்தானகமகே சுட்டிக்காட்டினார். கிராமிய ரீதியாக அதிகம் கவரக்கூடிய அந்தந்த மாகாணங்களில் பிரபல்யமான விளைாட்டுக்களை இனங்கண்டு அதற்கு தகுதியான திறமையான விளைாட்டு வீரர்களுக்கு உடனடியாக பயிற்சியளிக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

விளையாட்டு தரப்படுத்தலின் மூலம் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடியவர்களுக்கு பயிற்சியளிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளையாட்டு பேரவையின் உறுப்பினர் குமார் சங்கக்கார சுட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளும்போது விளையாட்டு திறமைகளுக்காக புள்ளிகளை வழங்கும் முறையை ஊக்குவித்தல் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூலம் தேசிய ரீதியான வீரர்களை உருவாக்குவதில் உள்ள இயலுமை பற்றி சங்கக்கார சுட்டிக்காட்டினார்.

சுகததாச விளையாட்டு அதிகார சபையை முழுமையாக மீள்கட்டமைப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

ஒலிம்பிக் பதக்கத்தை வெற்றிகொள்ளக்கூடிய விளையாட்டாக இனங்காணப்பட்டுள்ள ஈட்டி எரிதல் மற்றும் இலக்கு பார்த்து சுடுதல் போன்ற விளையாட்டுக்களை பாடசாலை மட்டத்திலிருந்து மேம்படுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

பல்வேறு விளையாட்டுக்களில் தமது திறமைகளை வெளிக்காட்டுகின்ற உலகில் ஏனைய நாடுகளில் உள்ள புலம்பெயர் இலங்கை விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு தேசிய இலச்சினையின் கீழ் ஒன்றிணையுமாறு அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர்.

கல்வி அமைச்ர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் தேனுக்க விதானகமகே, பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோருடன் துறைசார் அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் விளையாட்டு சங்கங்களின் பிரதிநிதிகள், முன்னணி விளையாட்டு வீரர்களும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.