20ஆவது அரசியலமைப்பு திருத்த வரைவை  பொதுஜன பெரமுன மீள்பரிசீலனை செய்வதன்  பின்னணிக் காரணங்கள்

16 Sep, 2020 | 07:21 PM
image

பி.கே.பாலச்சந்திரன்
அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்த வரைவுக்கு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள்ளும் அதன் நேச அணிக் கட்சிகள் மத்தியிலும் கிளம்பிய பல்வேறு எதிர்ப்புகளை தொடர்ந்து அந்த வரைவை மீள்பரிசீலனை செய்வதற்கு பொதுஜன பெரமுன தீர்மானித்தது. அந்த வரைவுக்கு ஆட்சேபங்களின்றி அமைச்சரவை அங்கீகாரத்தை வழங்கியதுடன் வர்த்தமானியிலும் கூட பிரசுரிக்கப்பட்டிருந்தபோதிலும், அது பொதுவெளிக்கு வந்ததும் பொதுஜன பெரமுன உள்ளும் அதன் தலைமையிலான கூட்டணிக்குள்ளும் எதிரணி மற்றும் ஊடகங்கள் மத்தியிலும் மிகவும் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்கவேண்டி வந்தது. இதன் மூலமாக அந்த வரைவில் இருக்கக்கூடிய சர்ச்சைக்குரிய அம்சங்களை ஆராய்ந்து தனக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச குழுவொன்றை நியமித்தார்.
சிங்கள தேசியவாத கோட்பாட்டாளரும் மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவருமான கலாநிதி குணதாச அமரசேகரவும் சிங்கள தேசியவாத சட்டத்தரணி மனோகர டி சில்வாவும் 20ஆவது திருத்த வரைவின் சில ஏற்பாடுகளை ஆட்சேபித்ததை கண்டு ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச ஆச்சரியமடைந்திருப்பார். வேறு தெரிவு இல்லாத நிலையில், கோதபாய ராஜபக்ச, மாற்று வரைவொன்றை தான் வெளியிடுவதாக அவர்களுக்கு கூறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 
சிங்கள தேசியவாத சக்திகள் எதை விரும்புகின்றனர் என்பது பற்றிய எதுவுமே இதுவரை தெளிவில்லை. ஆனால், இரட்டை பிரஜாவுரிமை உடையவர்கள் இலங்கையில் தேர்தலில் போட்டியிடுவதற்கு இருக்கும் தடையை நீக்குவது மேற்குலகுக்கு ஆதரவான சிங்கள புலம்பெயர் சமூகத்தவரும் தமிழ்  பிரிவினைவாதிகளுக்கு ஆதரவான புலம்பெயர் சமூகத்தவரும் ஊடுறுவுவதற்கு வழிவகுக்கக்கூடும் என்று இந்த சிங்கள தேசியவாத சக்திகள் அஞ்சுவதாக பலரும் சந்தேகிக்கின்றனர். இரட்டை பிரஜாவுரிமை உடையவரும் பொதுஜன பெரமுனவை பின்னணியிலிருந்து இயக்குகின்றவருமான பசில் ராஜபக்சவுக்கு எதிரானவர்கள் என்று கூறப்படுகின்ற தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச போன்றவர்கள் அவர் மீண்டும் பாராளுமன்றத்துக்குள் வருவதை விரும்பவில்லை. பசில் ராஜபக்ச கடைசியாக பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகித்தவேளையில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சை தன்வசம் எடுத்துக்கொண்டு இலங்கையின் பொருளாதார மன்னன் போன்று செயற்பட்டார். அத்துடன் அதிகாரத்தை பொறுத்தவரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அடுத்தவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
20ஆவது திருத்த வரைவு ஜனாதிபதி கோதபாயவுக்கு நெருக்கமான – அவரது ‘வியத்மக’ அமைப்பை சேர்ந்த சட்டத்தரணிகள் குழுவொன்றினால் வெளிப்படைத்தன்மை இல்லாமலும் அவசரமாகவும் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதே அதற்கு எதிரான பொதுவான முறைப்பாடாகும். வியத்மக அமைப்பு என்பது அரசியல் சார்பற்ற புத்திஜீவிகள் மற்றும் துறைசார் நிபுணர்களையும் கொண்ட ஒரு கூட்டு அமைப்பாகும். இந்த அரசியல்சார்பற்ற புத்திஜீவிகள் பொதுவில் அரசியல்வாதிகளை பற்றி ஒரு மங்கலான அபிப்பிராயத்தையே கொண்டவர்களாகவும் தேர்தல்களும் பாமரர்கள் நிரம்பிய பாராளுமன்றமும் நல்லாட்சி, நீதி, செயற்திறன் மற்றும் தேசிய முன்னேற்றத்துக்கு குந்தகமாக இருப்பவர்கள் என்ற அபிப்பிராயத்தை கொண்டவர்களாகவும் பொதுவில் இருக்கிறார்கள்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி என்பது எந்தவிதமான ஆக்கபூர்வமான தடுப்புகளும் சமப்படுத்தல்களும் இல்லாத (Checks and Balances) சகல அதிகாரங்களும் பொருந்திய பதவியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பாகவும் 20ஆவது திருத்த வரைவு விளங்குகிறது. ஒரு தடுப்பு பொறிமுறையாக பாராளுமன்றம் செயற்படுவதை (Checking Mechanism) இல்லாமல் ஆக்குகின்ற இந்த வரைவு சட்டங்களையும் நிதி சம்பந்தப்பட்ட சட்டமூலங்களையும் நிறைவேற்றுவதற்கு தேவையான ஒன்றாக மாத்திரம் பாராளுமன்றத்தை நோக்குகிறது. பிரதமரும் அமைச்சரவையும் (சகலரும் பாராளுமன்ற உறுப்பினர்கள்) கொள்கை வகுப்பதில் அல்லது அரசின் முக்கிய பதவிகளுக்கு நியமனங்களை செய்வதற்கு எந்தவொரு பங்கும் இல்லாத அல்லது சொற்ப பங்கை கொண்ட நடைமுறைப்படுத்தல் அமைப்புகளாக மாத்திரம் இருக்கும். சகல அதிகாரங்களும் நிறைவேற்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டு விட்டால் பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்தவொரு அதிகாரமும் இல்லாதவர்களாகவும் விடப்பட்டு விடுவர் என்பதால் ஆளும் பொதுஜன பெரமுனவை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட இந்த வரைவை  எந்தவகையிலும் விரும்பவில்லை என்று சில  பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் அறியமுடிகிறது. ஜனாதிபதி எளிதில் சந்திக்க முடியாதவராக இருந்தால் அவர்களின் நிலைமை மேலும் சிக்கலானதாக இருக்கும்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச, 20ஆவது திருத்த வரைவுக்கு வெளிப்படையாக ஆட்சேபனையை தெரிவிக்கவில்லை என்றபோதிலும், அவரும் மனவேதனை கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால்தான் போலும், அரசியல் நிலைவரங்களை பரீட்சித்து பார்ப்பதற்காக அல்லது அரசியல் கட்சிகள் அவற்றின் கருத்தை வெளிப்படுத்தட்டுமே என்பதற்காக அவர் மௌனமான இருந்தார் போலும். ஆனால், 20ஆவது திருத்த வரைவு தற்போதிருக்கும் வடிவில் கடுமையான ஆட்சேபங்களுக்குள்ளாகியிருப்பதை கண்ட அந்த கணமே – அதுவும் பொதுஜன பெரமுனவுக்குள் இருப்பவர்களே எதிர்ப்பை வெளிக்காட்டியபோது – பிரதமர் தவறுகளை திருத்துவதற்கான நடவடிக்கைகளில் உடனடியாகவே இறங்கி சர்ச்சைக்குரிய விடயங்களை ஆராய குழுவொன்றை நியமித்தார்.
பௌத்த குருமாரில் ஒரு பிரிவினரிடமிருந்து கிளம்பியிருப்பதாக கூறப்பட்ட ஆட்சேபங்கள் குறித்து கருத்து தெரிவித்த முன்னணி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், சிங்கள பௌத்த தேசியவாதம் ஆயுதப்படைகளினால் உரிமைபடுத்திக் கொள்ளப்படும் என்றும் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் இராணுவ காவல் தலைவர்களுக்கு மதகுருமார் தலைவணங்க ஏற்படலாம் என்றும் மகாசங்கம் அஞ்சுகிறது போலும் என்று குறிப்பிட்டார்.
சிங்கள பௌத்த தேசியவாதிகள் சிறுபான்மையினத்தவர்களான தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அவர்களது அரசியல் உரிமைகளை மறுப்பதற்கு விரும்பக்கூடும் என்கின்ற அதேவேளை, சிங்கள பௌத்த பெரும்பான்மையினத்தவர்களுக்காக ஜனநாயகத்தை உறுதிபடுத்த உறுதிபூண்டிருக்கிறார்கள். கடந்த 70வருடங்களாக அனுபவித்து வந்த ஜனநாயகத்துக்கு ஒரு அச்சுறுத்தலாக 20ஆவது திருத்தச் சட்ட வரைவை அவர்கள் நோக்குகிறார்கள் என்று கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறினார்.
20ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுமாக இருந்தால் அரசாங்கத்தில் தங்களது பங்கு மேலும் வலுவிழந்து போகும் என்று பொதுஜன பெரமுனவின் நேசக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் கவலைப்படுகிறார்கள். 20ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்படும் தருணத்தில் எதிரணியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்று மூத்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா எச்சரித்ததாக செய்திகள் வெளியாகின. பொதுஜன பெரமுனவின் பசப்பு வார்த்தைகளுக்கு மருண்டு போய்விட வேண்டாம் என்று சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நிமல் சிறிபால டி சில்வா கேட்டுக்கொண்டார்.
பொதுஜன பெரமுனவுக்கு தற்போது பாராளுமன்றத்தில் 149 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தேவைப்படுகின்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை  நிறைவேற்றுவதற்கு 150 உறுப்பினர்கள் தேவை. பொதுஜன பெரமுனவின் முக்கிய தலைவர்கள் எதிரணியிலிருந்து குறைந்தபட்சம் 10 பாராளுமன்ற உறுப்பினர்களை தம்பக்கம் இழுப்பதற்கு வியூகங்களை வகுத்து செயற்படுவதாகவும் 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு பிறகு தவிர்க்கப்பட்டு வந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை கூட தம்பக்கம் இழுப்பதற்கு அவர்கள் தயாராக இருப்பதாகவும் மனோ கணேசன் கூறினார். ஆனால், இதுவரையில் எதிரணியிலிருந்து கட்சித்தாவல் இடம்பெறுவதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை. 
ஆளும் பொதுஜன பெரமுனவின் தற்போதைய நெருக்கடி நிலையை எதிரணிக்கு அனுகூலமாக பயன்படுத்துவதற்கு அதுவும் குறிப்பாக சமகி ஜனபலவேகய தலைவர் சஜித் பிரேமதாச செயலில் இறங்குவதற்கான எந்தவொரு முயற்சியும் எடுக்காத நிலையில், முன்னாள் சபாநாயகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான கரு ஜயசூரிய 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை எதிர்ப்பதற்கு வெகுஜன இயக்கமொன்றை தொடங்கியிருக்கிறார்.
‘அரசியலமைப்புக்கான 19ஆவது திருத்தம் குறைபாடுகளை கொண்டது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள். அரசாங்க நிர்வாகம் பயனுறுதியுடைய முறையில் செயற்படுவதற்கு தடையாக இருக்கின்ற பிரிவுகள் சிலவற்றை திருத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்க முடியும். எதிரணியிலுள்ள நாங்களும் அத்தகைய ஒரு நடவடிக்கையை ஆதரித்திருப்போம். ஆனால், அந்த 19ஆவது திருத்தத்தை, கொடூரமானதும் சர்வாதிகாரமானதுமான 20ஆவது திருத்தத்தினால் பதிலீடு செய்வது மிகவும் தவறானதாகும். 19ஆவது திருத்தத்தின் குறைபாடுகளுக்கு தீர்வு 18பிளஸ் அல்ல, என்று மனோ கணேசன் 2010ஆம் ஆண்டில் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனக்கு அதிவிசேடமான அதிகாரங்களை பெறுவதற்காக நிறைவேறிய 18ஆவது திருத்தத்தை நினைவுபடுத்தி கருத்து தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தினால் 2015ஆம் ஆண்டு 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு 18ஆவது திருத்தம் இரத்துச் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. (டெய்லி எக்ஸ்பிரஸ்) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21