லிபிய கடற்பரபில் அகதிகளுடன் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் பலியாகியுள்ளனர்.


உள்நாட்டு போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.


இவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பிய நாடுகளை சென்றடைகின்றனர்.


இவ்வாறு மிகச் சிறிய படகில் அளவுக்கு அதிகமான மக்களுடன் ரகசியமாக மேற்கொள்ளப்படும் நீண்ட கடல் பயணங்கள் பல நேரங்களில் துயரத்தில் முடிந்துவிடுகின்றன.


எனவே இதுதொடர்பாக சர்வதேச இடம்பெயர் அகதிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து மக்களை எச்சரித்துவருகின்றன.

இந்த நிலையில் லிபிய கடல்பகுதியில் அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற 3 சிறிய படகுகளில் ஒரு படகு விபத்துக்குள்ளாகியுள்ளது.
 சம்பவ இடத்திற்கு விரைந்த லிபிய கடலோர பாதுகாப்பு பிரிவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 இதுவரை 24 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் நீரில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.