முன்னரெல்லாம் பத்திரிகைகளில் ஒரு விடயம் பிரசுரமாகாவிட்டால் வாசகர்கள் வறுத்தெடுத்துவிடுவார்கள். இப்போதெல்லாம் இணையத்தில் ஒரு விடயம் வராவிட்டால் இணையத்தளப் பயனாளர்கள் விட்டபாடில்லை. அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்த விடயம் பதிவாகின்றது.

இலங்கையில் அரசியல் வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்திய தலைவர்களில் ஒருவர் ஆறுமுகன் தொண்டமான் என்றால் அதில் இரண்டு கருத்துக்களுக்கு இடமில்லை. மலையக மக்களின் பிரதிநிதியாக மாத்திரமன்றி அவர்களின் பாதுகாவலனாகவும் விளங்கியவர் அமரர் ஆறுமுகம் தொண்டமான்.

 இந்த நிலையில் மலையகத்தின் மூத்த தலைவராகவும் மலையக மக்களின் விடிவுக்காகவும் பாடுபட்ட ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு மலையக மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. கொரோனாவையும் பொருட்படுத்தாமல் மக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் சாரைசாரையாக கலந்து கொண்ட விதத்தையும் தேர்தலில் அவரது மகன் ஜீவன் ஆறுமுகன் தொண்டமானுக்கு வழங்கிய பேராதரவையும் இதற்கு சான்றாகக் கொள்ளலாம்.

இந்நிலையில் இலங்கை தொழிலாளர்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் அனுதாபப் பிரேரணை மீதான விவாதம் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அவருக்கு பெரும் புகழாரம் சூட்டினார்கள்.

 அனைவருமே கட்சி பேதங்களை மறந்து ஆறுமுகன் தொண்டமானுக்கு இரங்கல் தெரிவித்தனர். இக்கட்டான சூழ்நிலையின் போதும் எப்போதும் கைவிடாத ஒருவர் ஆறுமுகன் தொண்டமான் என்றார் பிரதமர்.

இதே பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கட்சி பேதமின்றி அனைவருடனும் சுமுகமான உறவைப் பேணியவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் என்றார். 

இதே போன்றே வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளான ஈபிடிபி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆறுமுகன் தொண்டமானின் மக்கள் சேவைக்கு புகழாரம் சூட்டினர். 

இவ்வாறு கட்சி பேதமின்றி அனைத்து அரசியல் தலைவர்களும் மலையகத்தின் தலைவரான ஆறுமுகன் தொண்டமானுக்கு அஞ்சலி செலுத்தினர் அதுவே அரசியல் நாகரிகமாகவும் அமைந்தது. 

ஆனால் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஆறுமுகன் தொண்டமானின் இந்த அனுதாப பிரேரணையில் கலந்துகொள்ளவில்லை. அனுதாபம் தெரிவிக்கவும் இல்லை. அனுதாபப் பிரேரணையின் போது மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகி இருக்கவும் இல்லை. 

அதிலும் விசேடமாக தமிழ் முற்போக்குக் கூட்டணியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த அனுதாப பிரேரணையில் பங்கேற்கவும் இல்லை. அத்துடன் உரையாற்றவும் இல்லை. இது மலையக மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மலையகத்துக்கு சேவையாற்றி மரணித்த ஒரு மனிதனுக்கு அனுதாபம் கூறும் மனப்பாங்கு இவர்களிடம் இல்லையா? என மக்கள் சலித்துக் கொண்டார்கள். 

கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் 6 பேர் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர். மனோகணேசன் தலைமையிலான இந்தக் கூட்டணியில் நுவரெலியா, கண்டி, பதுளை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் அடங்கியிருந்தனர். அந்த வகையில் இவர்கள் அமரர் ஆறுமுகம் தொண்டமானின் அனுதாபப் பிரேரணையில் உரையாற்றியிருந்தால் அந்த மக்களை கௌரவப்படுத்துவதாக  அமைந்திருக்கும். ஆனால் அது நடக்கவில்லை.

பெரும்பான்மை வாக்குகளை தாம் பெற்றுள்ளதாக கூறும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் எதற்காக இந்த அனுதாப பிரேரணையை புறக்கணித்தார்கள் என்பதுதான் புரியவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வடிவேல் சுரேஷும்  இந்த அனுதாப பிரேரணையில் உரையாற்றவில்லை. 

எந்தவொரு செய்கைக்கும் பரந்த மனப்பான்மையும் அரசியல் நாகரிகமும் பிறரை நேசிக்கும் தன்மையும் அவசியம். அரசியல் தலைவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் மக்களுக்கு எடுத்துக் காட்டாக திகழ வேண்டும். மாறாக குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாக இருக்க கூடாது. 

சிங்கள அமைச்சர்கள், எதிரணியினர், முஸ்லிம் தலைவர்கள் என அனைவரும் அமரர் ஆறுமுகம் தொண்டமானுக்கு அனுதாப உரையாற்றிய நிலையில் மலையகத் தமிழ் எம்பிகள் ஒதுங்கிக் கொண்டமை அவர்கள் அரசியல் ரீதியாக இன்னும் முன்னேறவில்லை என்பதையும் பிற்போக்குத்  தனத்தையுமே எடுத்துக்காட்டுவதாக மக்கள் கூறுகின்றனர். 

அரசியல் முரண்பாடுகள் கோபதாபங்கள் போட்டா போட்டிகள் இருப்பினும் மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதே அரசியல் நாகரீகம். இதர அரசியல் தலைவர்கள் அதனை நன்கு உணர்ந்து நடந்துள்ளனர். 

ஆனால் மலையக மக்கள் பிரதிநிதிகளின் இந்த செய்கை தாங்கள் ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருப்பதையே உலகிற்கு பறைசாற்றி உள்ளது. வெறுமனே நாமே மலையக தலைவர்கள் என்று மார்தட்டிக் கொள்வதில் எந்த அர்த்தமும் கிடையாது. அதற்கான பக்குவத்தை அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இத்தகைய செயல்கள் மூலம் அவர்கள் மக்களின் செல்வாக்கை இழந்து விடக் கூடாது என்ற நல்ல நோக்கத்துடனேயே இதனை சுட்டிக் காட்டுகின்றோம். மனிதனுக்கு மரணம் ஒன்றே நிச்சயமானது எனவே மரணித்த ஒருவரை கௌரவப்படுத்துவதே உண்மையான மனிதாபிமானமாகும் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்