முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் புதன்கிழமை ஒரே இரவில் இஸ்ரேலிய இராணுவம் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனால் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பாலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய காசாவில் உள்ள நகரமான டெய்ர் அல்-பாலாவிலும், தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸின் சில பகுதிகளையும் குறி வைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் வடக்குப் பகுதியில் உள்ள பீட் லஹியாவில் உள்ள ஒரு இடத்தில் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக உத்தியோகபூர்வ பாலஸ்தீன செய்தி நிறுவனமான வாஃபா தெரிவித்துள்ளது.

இதேவேளை காசாவில் உள்ள பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் குழு இஸ்ரேலிய வான் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக,  இஸ்ரேல் மீது எதிர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

இஸ்ரேலுக்குள் ராக்கெட்டுகள் வீசப்பட்டதற்கு பதிலளிக்கும் வகையில் ஹமாஸுக்கு சொந்தமான தளங்கல் மீது 10 வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் புதன்கிழமை ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.

அதன்படி செவ்வாய்க்கிழமை மாலை, காசா பகுதியில் இருந்து குறைந்தது இரண்டு ராக்கெட்டுகள் வீசப்பட்டன, அவற்றில் ஒன்று இஸ்ரேலின் 'Iron Dome' ஏவுகணை எதிர்ப்பு அமைப்பால் தடுக்கப்பட்டது, மற்றொன்று கடலோர இஸ்ரேலிய நகரமான அஷ்டோடில் தாக்கி இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகியவை வொஷிங்டன் வெள்ளை மாளிகையில் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ள நிலையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.