சிவாஜிலிங்கத்துக்கு பிணை 

Published By: Digital Desk 4

16 Sep, 2020 | 02:46 PM
image

“நீதிமன்றத் தடை உத்தரவையும் மீறி தியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்தல் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு கடும் எச்சரிக்கையின் பின் பிணை வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், அவருடன் கைது செய்யபட்ட வாடகைக்கு அமர்த்தப்பட்ட முச்சக்கர வண்டிச் சாரதியும் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

 நீங்கள் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட உயர் பதவிகளை வகித்தவர். அவ்வாறு இருக்கையில் இந்த விவரத்தை அறிந்திருக்காமல் இருக்க முடியாது.

சட்டத்தின் படியே நீதிமன்றக் கட்டளைகள் இயற்றப்படுகின்றன. அது எல்லோருக்கும் சமம். முன்மாதிரியாகச் செயற்படவேண்டிய நீங்களே இவ்வாறு சட்டத்தை மதிக்காது செயற்பட முடியாது. இனி இவ்வாறு நடக்ககூடாது” என்று யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.பீற்றர் போல் பிணைக் கட்டளை வழங்கினார்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான நேற்று முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவிலில் நினைவேந்தல் நிகழ்வை செய்திருந்தார். அதனை அறிந்த கோப்பாய் பொலிஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சிவாஜிலிங்கத்தையும் அவருக்கு வாடகைக்கு முச்சக்கர வண்டியைச் செலுத்திய சாரதியையும் கைது செய்தனர்.

இருவரையும் தடுத்துவைத்திருந்த பொலிஸார், யாழ்ப்பாணம் நீதிமன்றில் இன்று முற்படுத்தினர்.

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரான லெப்டின் கேணல் திலீபனை நீதிமன்றத் தடை உத்தரவை மீறி நினைவுகூர்ந்த குற்றச்சாட்டின் கீழ் இருவருக்கும் எதிராக மன்றில் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

சந்தேக நபர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணிகள் என்.சிறீகாந்தா, வி.திருக்குமரன் உள்ளிட்ட 8 சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகினர்.

“இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளால் லெப். கேணல் பதவி வழங்கப்பட்ட திலீபனுக்கு முதலாவது சந்தேக நபர் சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தியுள்ளார். அதற்கு இரண்டாவது சந்தேக நபர் உடந்தையாக இருந்துள்ளார்.

திலீபனுக்கு நினைவேந்தல் செய்வதற்கு இந்த நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு முதலாவது சந்தேக நபரின் மனைவியிடம் பொலிஸாரால் கையளிக்கப்பட்டது.

அந்த தடை உத்தரவை மீறி அவர் இந்த நினைவேந்தல் நிகழ்வை நடத்தியுள்ளார்.

அத்துடன் நினைவேந்தல் நிகழ்வில் சந்தேக நபர்களால் பயன்படுத்தபட்ட பனரில் ஈழம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது இலங்கையிலிருந்து பிரிக்க முற்படும் நாட்டைக் குறிக்கும்

எனவே நீதிமன்றத் தடையை மீறி மேலும் பலர் அஞ்சலி நிகழ்வை நடத்த உள்ளதால் சந்தேக நபர்கள் இருவரையும் பிணையில் செல்ல அனுமதிக்காது 14 நாள்கள் விளக்கமறியல் உத்தரவை மன்று வழங்க வேண்டும்” என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.

“நீதிமன்ற தடை உத்தரவு பிரதிவாதியிடம் ஒப்படைக்கப்படவேண்டும். எனினும் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர். சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பிரதிவாதியின் மனைவி உள்ளிட்ட உறவினர்களிடம் ஒப்படைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே சந்தேக நபர் தெரியும் வகையிலாவது நீதிமன்றத் தடையை பொலிஸார் ஒட்டியிருக்கவேண்டும்.

அதனால் சந்தேக நபர் நீதிமன்றத் தடை உத்தரவை மீறவில்லை. ஏனைய விடயங்களுக்குச் செல்ல நாம் விரும்பவில்லை.

மேலும் ஈழம் என்ற சொல்லு தமிழர் பகுதிகளைக் குறிக்கிறது. அதில் தவறில்லை. தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) 30 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டில் பதிவு செய்த கட்சியாக உள்ளது. அதன் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி வகித்துள்ளனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) பொதுச் செயலாளர் அரசில் அங்கம் வகித்து தற்போது அமைச்சராகவும் பதவி வகிக்கின்றார். எனவே ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்தியமை தவறில்லை” என்று மூத்த சட்டத்தரணி என்.சிறீகாந்த மன்றுரைத்தார்.

இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்து பிற்பகல் 1.45 மணிக்கு கட்டளை வழங்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38