(எம்.மனோசித்ரா)

நாட்டில் சுகாதார பாதுகாப்பு நூறு சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் அது தொடர்பில் சுகாதார அமைச்சினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் வரை விமான நிலையங்களை திறப்பதற்கு எதிர்பார்க்கவில்லை என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில் , 

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நாட்டுக்கு வருபவர்கள் தொடர்பில் கடற்படை மிக உன்னிப்பாக அவதானித்து வருகிறது. இலங்கையிலுள்ள சுமார் 220 இலட்சம் மக்களின் பாதுகாப்பை நூறு வீதம் உறுதிப்படுத்திய பின்னர் அது தொடர்பில் சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்படும் வரை விமான நிலையங்களை திறப்பதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை என்றார்.

இந்நிலையில் கட்டார் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து இன்று புதன்கிழமை சுமார் 28 பேர் நாட்டை வந்தடைந்தனர். கட்டாரிலிருந்து QR 668 விமானம் மூலம் 24 பேரும் , இந்தியா - சென்னையிலிருந்து  6E 9030 விமானம் மூலம் சிலரும் மற்றும் UL 1026 விமானம் மூலம் ஒருவரும் , இந்தியா - மும்பை நகரிலிருந்து UL 1042 விமானம் மூலம் மூவரும் நாட்டை வந்தடைந்தனர்.

இவ்வாறு வருகை தந்த அனைவரும் விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நாடளாவிய ரீதியில் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்களிலிருந்து இன்று  புதன்கிழமை 224 பேர் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். அதற்கமைய இது வரையில் 41,192 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர்.

இதே வேளை முப்படையினரால் நாடளாவிய ரீதியில் நிர்வகிக்கப்பட்டு வரும் 59 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6,255 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.