ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகியவை ஈரானுக்கு எதிரான மத்திய கிழக்கு நாடுகளின் மூலோபாய மறுசீரமைப்பில் இஸ்ரேலுடனான உறவை சீராக்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

அமெரிக்காவின் இந்த தரகு ஒப்பந்தங்கள் செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில் கையெழுத்திடப்பட்டன. அங்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பஹ்ரைன் மற்றும் எமிராட்ஸ் அதிகாரிகளை சந்தித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் வொஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் பஹ்ரைனின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லாதீப் அல் சயானி ஆகியோருடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

மூன்று நாடுகளிடையேயான ஒப்பந்தம் சர்வதேச அரசியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மேலும் இஸ்ரேல் உடன் ஒப்பந்தம் செய்யும் 3 மற்றும் 4 ஆவது இஸ்லாமிய நாடாக ஐக்கிய அமீரகம் மற்றும் பஹ்ரைன் உருவெடுத்துள்ளது. 

இதற்கு முன் எகிப்து மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகள் 1979 மற்றும் 1994ல் இஸ்ரேல் உடன் ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இஸ்ரேலுடன் அரபு நாடுகள் ஒப்பந்தம் செய்துகொண்டதற்கு பாலஸ்தீனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

அந்நாட்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பஹ்ரைன் நாடுகளை கண்டித்து போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அதேபோல் ஈரானும் ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இஸ்லாமிய மக்களுக்கு இவர்கள் துரோகம் செய்துவிட்டதாக ஈரான் குற்றம் சாட்டி உள்ளது.