கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 90,123 ஆக அதிகரித்துள்ளதாக அந் நாட்டு சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியதையடுத்து, இந்தியாவின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை புதன்கிழமை 5 மில்லியனையும் (5,020,359) கடந்துள்ளது.

அமெரிக்காவிற்குப் பிறகு ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மொத்த கொரோனா நோயாளர்களை உறுதிசெய்த உலகின் இரண்டாவது நாடாக இந்தியா தற்போது உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் அங்கு 1,290 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இதனால் இந்தியாவின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 82,066 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 11 ஆம் திகதி மாத்திரம் இந்தியாவில் 97,570 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவே சர்வதேச ரீதியில் ஒரு நாட்டில் ஒரே நாளில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் அதிகபட்ச எண்ணிக்கை ஆகும்.

இந்த மாதத்தில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.