(எம்.எப்.எம்.பஸீர்)

வட மாகாண முன்னாள் முதலமைச்சரும்  தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான  சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு  தொடர்பிலான விசாரணைகள் மேன் முறையீட்டு நீதிமன்றில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  

குறித்த வழக்கை சுமுகமாக முடித்துக்கொள்ள, மனுதாரரான வடக்கு மாகாண முன்னாள் மீன் பிடித்துறை அமைச்சர் ப.டெனிஸ்வரன் தரப்பில் முன் வைக்கப்பட்ட 3 நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து, விசாரணைக்கு முகம் கொடுக்க தயார் எனவும் விசாரணைகளை நடத்துமாறும், சி.வி. விக்கினேஸ்வரன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன்  மன்றில் அறிவித்த நிலையில், இந்த விசாரணைகள் நேற்று பிற் பகல் ஆரம்பமாகின.

 மேன் முறையீட்டு நீதிமன்றின், 206 ஆம் இலக்க விசாரணை அறையில், நீதிபதிகளான மஹிந்த சமயவர்தன, பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

 வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கின் முதல் பிரதிவாதியான வட மாகாண முன்னாள் முதலமைச்சரும்  தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான  சி.வி.விக்கினேஸ்வரன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன்,

' இந்த வழக்கில் முறைப்பாட்டாளர் தரப்பு ஏதோ சுமுகமான முறையில் தீர்த்துக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும், வழக்கை வாபஸ் பெற முயல்வதாகவும் ஊடகங்களில் செய்திகளை படித்தேன். அது தொடர்பில் முதலில் தெளிவுபடுத்திக்கொள்வது சிறந்தது.' என  திறந்த மன்றில் தெரிவித்தார்.

இதன்போது மனுதாரரான ப.டெனீஸ்வரன் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ, ' வழக்கினை சுமுகமாக  தீர்த்துக்கொள்வது தொடர்பில், சில தரப்புக்கள் எனது சேவை பெறுநரை அணுகியிருந்தன.  

எனினும் முதல் பிரதிவாதி மன்றில் மன்னிப்புக் கோரி, உயர் நீதிமன்றில் இவ்வழக்குக்கு எதிராக செய்துள்ள மேன் முறையீட்டினை வாபஸ் பெற்றுக்கொண்டு, இவ்வழக்கு செலவினை மீள செலுத்துவாராக இருந்தால்,  இவ்வழக்கை வாபஸ் வாங்குவது தொடர்பில் ஆட்சேபனை இல்லை. ' என தெரிவித்தார்.

இதனையடுத்து மீளவும் திறந்த மன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் ' எமக்கு வழக்கை வாபஸ் பெறத் தேவை இல்லை. நாம்  மன்னிப்புக் கோரப் போவதும் இல்லை. இது யாழ். அரசியல்.  வழக்கை விசாரணைக்கு எடுங்கள். விசாரணைக்கு முகம் கொடுக்க நாம் தயார் .' என அறிவித்தார்.

 இதனையடுத்தே வழக்கின் சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

வடக்கு மாகாண  உட்கட்டமைப்பு, போக்குவரத்து, வீதி அபிவிருத்தி, மோட்டார் வாகன, வர்த்தக வாணிப மற்றும் மீன் பிடித்துறை அமைச்சராக இருந்த ப.டெனீஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்க முதலமைச்சராக இருந்த  விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்தார். இதனையடுத்து முதலமைச்சரின் தீர்மானத்தை ரத்துச் செய்யும் பேராணையொன்றினை பிறப்பிக்குமாறு கோரி ப. டெனீஸ்வரன் மேன் முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தார்.

ப.டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கி, 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சி.வி.விக்னேஷ்வரன் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்ததுடன், அந்த வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் வகையில் கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு விதித்திருந்தது. அத்துடன்  டெனீஸ்வரன் வகித்த பதவியை அவருக்கு தொடரவும் சந்தர்ப்பத்தை அவ்வுத்தரவு ஊடாக மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கியது.

 நீதிமன்றத்தின் அந்த உத்தரவை செயற்படுத்தாமை காரணமாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் ´நீதிமன்றத்தை அவமதித்ததாக´ கூறி வடக்கு மாகாண முன்னாள் மீன் பிடித்துறை அமைச்சர் ப.டெனீஸ்வரன் விக்கினேஸ்வரனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றினை தாக்கல் செய்தார்.

 இந் நிலையில் அந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சட்டத்துக்கு முரணானது எனக் கூறி விக்கினேஸ்வரன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி  சட்டத்தரணி கனக ஈஸ்வரன் அடிப்படை ஆட்சேபனம் கொண்டு வந்தார்.  

அந்த அடிப்படை ஆட்சேபத்தையே கடந்த 2019 பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான குமுதினி விக்ரமசிங்க மற்றும்  ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் நிராகரித்த நிலையில்,  நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் விசாரணைகளை தொடர தீர்மானித்தனர்.

  இந் நிலையில் இது தொடர்பில் உயர் நீதிமன்றில் விஷேட மேன் முறையீடொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ள பின்னணியிலேயே நேற்று சாட்சி விசாரணைகளை மேன் முறையீட்டு நீதிமன்றம் ஆரம்பித்தது.

 முதலில் இந்த மனு, மேன் முறையீட்டு நீதிமன்றின் 301 ஆம் இலக்க விசாரணை அறையில் விசாரணைக்கு ஏற்கப்பட இருந்த நிலையில், பின்னர் 206 ஆம் இலக்க விசாரணை அறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 நேற்று சுமார் இரு மணி நேரம் இடம்பெற்ற விசாரணைகளில், மனுதாரர் தரப்பின் இரு சாட்சிகளிடம் சாட்சி விசாரணைகள் இடம்பெற்றன.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், முதல் பிரதிவாதியாக சி.வி. விக்கினேஸ்வரனும், இரண்டாம் பிரதிவாதியாக அனந்தி சசிதரனும், மூன்றாம் பிரதிவாதியாக சிவனேசனும் பெயரிடப்பட்டுள்ளனர்.

 நேற்று சி.வி. விக்கினேஸ்வரன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் ஆஜரான நிலையில், அனந்தி சசிதரன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி இரத்தினவேலும், சிவனேசன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி தனுக நந்தசிறியும் ஆஜராகினர்.

 இதன்போது 2 ஆம் பிரதிவாதியான அனந்தி சசிதரனிடம், நீதிச் சேவை ஆணைக் குழு நியமித்த மொழி பெயர்ப்பாளர் ஒருவர் ஊடாக, அரசியலமைப்பின் 105 ( 3) ஆம் உறுப்புரைக்கு அமைய, முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு குற்றவாளியா? சுற்றவாளியா ? என வினவப்பட்டது. அதற்கு அனந்தி சசிதரன் தான் குற்றமற்றவர் என பதிலளித்தார்.

 இதனையடுத்து சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், முதல் சாட்சியாக முறைப்பாட்டாளர் தரப்பில்  வட மாகாண பிரதான செயலர்  அந்தோனிப்பிள்ளை பத்திநாதன் அழைக்கப்பட்டார்.

 நேற்றைய தினம்  மேன் முறையீட்டு நீதிமன்றின் 206 ஆம் இலக்க விசாரணை அறையில் சாட்சிக் கூடுகள் இன்றி, அது குறித்த இறுக்கமான நடை முறைகள் பின்பற்றப்படாது,  சாதரணமாக சாட்சி விசாரணைகள் இடம்பெற்றமை விஷேட அம்சமாகும்.

 மனுதாரர் தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோவின் கேள்விகளுக்கு பதிலளித்தவாறு,  வட மாகாண பிரதான செயலர் அந்தோனிப்பிள்ளை பத்திநாதன் சாட்சியமளித்தார்.

 கடந்த 2015 பெப்ரவரி மாதம் முதல் அப்பதவியில் நீடிப்பதாக குறிப்பிட்ட அவரிடம்,  டெனீஸ்வரன்  வட மாகாண சபையில் வகித்த அமைச்சுப் பதவிகள், அதில் இருந்து நீக்கப்பட்டமை, மேன் முறையீட்டு நீதிமன்றின்  இடைக்காலத் தடை உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தி,  கேள்விகள் தொடுக்கப்பட்டன. அவற்றுக்கு ஆவணங்களையும் சரிபார்த்தவண்ணம் அவர் சாட்சியமளித்தார்.

 இதன்போது டெனீஸ்வரனுக்கு மீள அமைச்சுப் பதவிகளில் கடமையாற்ற மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவொன்றூடாக அனுமதியளித்திருந்த நிலையில், அவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும், சி.வி. விக்கினேஸ்வரன், அனந்தி சசிதரன், சிவனேசன் ஆகியோர் டெனீஸ்வரனின் அமைச்சு விடயப்பரப்புக்களை பகிர்ந்து அவற்றை தமக்கு கீழ்  வைத்திருந்ததாக பிரதான செயலர் அந்தோனிப்பிள்ளை பத்திநாதன் சாட்சியமளித்தார்.

 இதனை உறுதிசெய்ய  2018 ஜூன் 29 ஆம் திகதியின் பின்னர், அதாவது மேன் முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால  நிவாரணத்தின் பின்னர், டெனீஸ்வரன் வகித்த அமைச்சு விடயங்களில் பிரதிவாதிகள் செயற்பட்டமையை உறுதிசெய்ய அவர்களது கையொப்பம், இறப்பர் முத்திரையுடன் பரிமாற்றப்பட்ட ஆவணங்களை சாட்சியாளர் அடையாளம் காட்டினார்.

இதனையடுத்து, இரண்டாவது சாட்சியாளராக,  வட மாகாண முதலமைச்சரின் முன்னாள் செயலாளர்களில் ஒருவரான சிவலிங்கம் சத்தியலிங்கத்தின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.  அவரிடமும் குறிப்பாக,  பறிமாற்றப்பட்ட ஆவணங்களை மையப்படுத்தியே சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

 இந் நிலையில் வழக்கின் விசாரணைகள் இன்று பிற்பகல் 1.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.