(செ.தேன்மொழி)
19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நாட்டுக்கு பயனை பெற்றுக் கொடுப்பதற்காக அன்றி , முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிகாரங்களை பெற்றுக் கொடுக்கும் நோக்கத்திலேயே உருவாக்கப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா குற்றஞ்சாட்டியுள்ளார்.                

நீர்கொழும்பு நகரசபையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் நாட்டுக்கு பயன்தரும் எந்த விடயங்களும் இல்லை. உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்களின் பின்னர் பொலிஸ் மா அதிபரை பதவி விலக்கமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜனநாயக நாடொன்றில் தேர்தலை உரிய நேரத்தில் நடத்த வேண்டும் என்ற நிலைமை காணப்பட்டாலும் ,சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவினால் தேர்தலை உரிய நேரத்தில் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.

நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதியும் , பிரதமரும் இரு பாதையில் பயணித்தனர். அதனால் நாடு பின்னடைவையே சந்தித்திருந்தது. அதனால் தான் மக்கள் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுத்துள்ளனர். முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஜனாதிபதியாக வரமுடியாது என்பதன் காரணமாகவே , 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்து , பிரதமருக்கான அதிகாரங்களை அதிகரித்துள்ளனர்.  இதவேளை ராஜபக்ஷர்களை அரசியல் செயற்பாடுகளிலிருந்து விலக்கும் எண்ணமும் இந்த திருத்தத்தில் மேலோங்கி காணப்படுகின்றது.

இந்நிலையில் அரசாங்கத்தினால் கொடுவரப்படவுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபானது நாட்டுக்கு நன்மை பயக்கும் திருத்தமொன்றாகவே உருவாக்கப்படவுள்ளது. அதற்கமைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ திருத்தத்தை மீளாய்வு செய்வதற்கு தகுதியான நபர்களையே நியமித்துள்ளார் என்றார்.