பல்லவெல பகுதியில் 30 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இராணுவத்தில் முன்னர் சேவையாற்றிய சிப்பாய் உள்ளிட்ட  இரு சந்தேகநபர்கள் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக மேல்மாகாண புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. 

பல்லவெல - மிஹிது புரய மற்றும் மிதெல்லவல பகுதிகளைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல்மாகாண - கம்பஹா குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய பல்லவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லேஹேவ பகுதியில் முன்னெடுக்கப்ட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது ஒன்றரை கிலோ கேரள கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களிடமிருந்து கஞ்சா தொகை 310 000  ரூபாவிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டவை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மல்லேஹேவ பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் பல்லவெல - மிஹிது புர பகுதியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ சிப்பாயின் வீட்டிலிருந்து  பொதிகளில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.