சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அன்று தொடக்கம் இன்று வரை உலகளவில் பாரிய உயிர் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. 

இந்நிலையில், உலகளவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பெற்றுள்ளது. அத்தோடு, கடந்த பெப்ரவரி, மார்ச் மாதங்களில் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

இதற்கிடையில், ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக பிரான்ஸ் நாட்டில் தினமும் சராசரியாக 5 ஆயிரம் பேர், இங்கிலாந்தில் 2 ஆயிரம் பேர், ஸ்பெயினில் 3 ஆயிரம் பேர், ஜெர்மனியில் 2 ஆயிரம் பேர், என்ற அளவில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது. 

55 ஐரோப்பிய நாடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 51 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐரோப்பாவில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் மீண்டும் அதிகரிக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய கிளை இயக்குனர் ஹான்ஸ் கூறுகையில்,’இந்த சூழ்நிலை மிகவும் கடினமாகப்போகிறது. ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் நாம் மீண்டும் அதிக கொரோனா உயிரிழப்புகளை சந்திக்கப்போகிறோம்’ என தெரிவித்தார்.