சூரியனிலிருந்து இரண்டாவதாக இருக்கும் கிரகமான வெள்ளியில் உயிர்த்தொழிற்பாடுகள் இடம்பெற்றிருக்கலாம் என வானியல் ஆய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதுவரைகாலமும் உயிர்வாழ தகுதியில்லாத கிரகமென முடிவு செய்யப்பட்ட வெள்ளியின் வளிமண்டல மேற்பரப்பில் அதிக அமிலத்தன்மையும் நச்சுத்தமையும் வாய்ந்ததான பொஸ்பைன் மூலக்கூறுகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் காடிப் பல்கலைக்கழக பேராசிரியரான ஜேன் கிரேவ்ஸ் தெரிவித்துள்ளார்.

வெள்ளியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொஸ்பைன் படிவுகள்

"வெள்ளியில் கண்டுபிடிக்கப்பட்ட பொஸ்பைன் படிவுகள் எமக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கின்றன. காரணம் என்னவென்றால் பொஸ்பைன் என்பது ஓட்ஸிசன் இல்லாத இடத்தில் இடம்பெறும் நுண்ணுயிர்த்தாக்கத்தின் விளைவினால் வெளிவரும் படிமம் ஆகும். ஆகவே அங்கு நுண்ணுயிர்த்தொழிற்பாடுகள் இடம்பெற்றிருப்பதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகமாகும். ஆனாலும் நிச்சயமாக இது குறித்து சொல்ல முடியாவிட்டாலும் வெள்ளி பற்றிய எதிர்கால ஆய்வுகளில் இது மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும்" என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே செவ்வாயில் வாழ முடியும் என்ற நம்பிக்கையில் ஆய்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் எதிர்காலத்தில் வெள்ளியிலும் ஆய்வுகளுக்கான கதவை இந்த அவதானிப்பு திறந்து வைத்துள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.