பிரித்தானியாவின் பிரதமராக பதவியேற்ற தெரேசா மே, முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனின் ஆதரவாளர்கள் பலரை நீக்கி தனது அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்டுள்ளார்

இந்த அமைச்சரவையில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டும் என்ற தரப்பு மற்றும் நீடித்திருக்க வேண்டும் என்று கூறிய இரண்டு தரப்பினருக்கும் இடமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விலக வேண்டும் என்ற தரப்பிலிருந்து புதிய வெளியுறவு அமைச்சராக போரிஸ் ஜான்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமைப் பதவிக்குத் தன்னுடன் போட்டியிட்டு பின்னர் விலகிக் கொண்ட ஆன்ரியா லீட்சம், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டேவிட் கேமரன் அமைச்சரவையில் இருந்த ஜார்ஜ் ஆஸ்பர்ன், மைக்கோல் கோவ், ஜான் விட்டிங்டேல், நிக்கி மோர்கன், ஆலிவர் லெல்வின் ஆகியோர் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

புதிதாக உருவாக்கப்பட்ட பிரெக்ஸிட் அமைச்சர் பொறுப்பில் டேவிட் டேவிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் நடைமுறைகள் குறித்த செயல்பாடுகளை அவர் மேற்கொள்வாரென தெரிவிக்கப்படுகின்றது.

புதிதாக உருவாக்கப்பட்ட  சர்வதேச வர்த்தக அமைச்சர் பதவியில், லியம் ஃபாக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் எரிசக்தித்துறை அமைச்சர் ஆம்பர் ரூட், தெரேசா மே முன்னர் வகித்து வந்த உள்துறை அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரவையில் ஆண்கள் 70 சதம், பெண்கள் 30 சதம் என்ற அளவில் நியமிக்கப்பட்டுள்ளனர். கேபினட் அமைச்சர்களில், தெரேசா மே உள்பட 16 பேர் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நீடிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டவர்களும்,ஏழு பேர் பிரித்தானியா விலக வேண்டும் என்ற நிலைப்பாடினை கொண்டவர்கள்.

தெரேசா மே தனது அமைச்சரவையை ஏற்படுத்தியிருக்கும் விதம், பாராட்டத்தக்க வகையில் கருணை காட்டப்படாத ஒன்று என கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் வெளியுறவுச் செயலர் சர் மால்கம் ரிப்கின்ட் குறிப்பிட்டுள்ளார்.

நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்பனை அமைச்சரவையில் இருந்து நீக்கிய தெரேசா, அவருக்கு அமைச்சரவையில் இடமே தராதது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.