கிளிநொச்சியில் போலியான மின் இணைப்பு விண்ணப்ப படிவங்கள். அவை ஏற்றுக்கொள்ளப்படாது என இலங்கை மின்சார சபையின் கிளிநொச்சி அலுவலகம் அறிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் மின் இணைப்பு கிடைக்கப்பெறாத மக்களுக்கு மின்சாரம் பெற்றுத் தரப்படும் என போலியான  விண்ணப்ப படிவங்கள் வழங்க்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட்டமையை தொடர்ந்து இலங்கை மின்சார சபையின் கிளிநொச்சி அலுவலகத்திடம் தொடர்பு கொண்டு வினவிய போது,

மின் இணைப்பு கிடைக்கப்பெறாத மக்கள் புதிதாக மின்சார இணைப்பை பெறுவதாயின் இலங்கை மின்சார சபையிடமே விண்ணப்பத்தை பெற்று உரிய முறைப்படி பூர்த்தி செய்து வழங்க வேண்டுமே தவிர  கட்சிகள் தனிநபர்கள் வழங்கும் விண்ணப்படிவங்கள்  ஏற்றுக்கொள்ளப்படாது என  இலங்கை மின்சார  சபையின் கிளிநொச்சி அலுவலம் அறிவித்துள்ளது.

கிளிநொச்சி அரசியல் கட்சி ஒன்றின்  கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்  கட்சியின் பெயரில்  விண்ணப்ப படிவம் ஒன்றை தயாரித்து மின் இணைப்பு கிடைக்காத மக்கள் குறித்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 15.09.2020 முன் கரைச்சி பிரதேச சபையில் ஒப்படைக்குமாறு பொது மக்களுக்கு அறிவித்திருந்தார். 

இது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் கிளிநொச்சி அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு வினவிய போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் இதுவரை காலமும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த  நடைமுறைகளே மின்சாரம் இணைப்பு வழங்குவதற்கு பின்பற்றப்பட்டு வருகிறது. அதற்காக  மின் இணைப்பு கிடைக்கப்பெறாத மின்சார சபை  அலுவலகங்களில் விண்ணப்ப படிவத்தை பெற்று அதனை  உரிய முறைப்படி பூர்த்தி செய்து வழங்க வேண்டும் இதுவே நடைமுறை எனத் தெரிவித்த அவர்கள்.  வேறு விண்ணப்ப படிவங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது.  எனவும் தெரிவித்தனர்.