கர்ப்ப காலத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் சர்க்கரை நோயால் அவர்களது பிள்ளைகளுக்கு நாட்பட்ட பாதிப்பு ஏற்படும் என்றும், அதிலும் குறிப்பாக அவர்கள் விரைவில் வயதான தோற்றத்தை அடைவார்கள் என்றும் அண்மைய ஆய்வின் மூலம் தெரிய வந்திருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

உலகம் முழுவதும் 20 வயது முதல் 80 வயது வரை உள்ள 223 மில்லியன் பெண்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதாகவும், இதில் 80 சதவீதத்தினருக்கு மேல் பேறுகால சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது. அத்துடன் பிறக்கும் ஆறு குழந்தைகளில் ஒரு குழந்தை கர்ப்பகால சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் கண்டறிந்திருக்கிறார்கள்.

பேறு காலத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் சர்க்கரை நோயை அவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் முறையாக கட்டுப்படுத்தாவிட்டால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ரத்த அழுத்தம், உடற்பருமன் உள்ளிட்ட பல்வேறு தொற்றா நோய்களின் பாதிப்புக்கு ஆளாவார்கள் என்றும், இவர்கள் எதிர்காலத்தில் விரைவில் முதுமை தோற்றத்தை அடைவார்கள் என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது.

இதற்கு அவர்களின் மரபணுவில் ஏற்படும் மாற்றமே காரணம்.  இவர்களின் உடல் எடை அதிகரிப்பு, கொழுப்பின் அளவு அதிகரிப்பு , ரத்த அழுத்தம் மற்றும் கையின் மேற்பகுதியில் சுற்றளவு இயல்பான அளவைவிட அதிக அளவில் இருப்பது போன்ற பல்வேறு அறிகுறிகளால் இதனை கண்டறியலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

பொதுவாக பேறுகால சர்க்கரையின் அளவு, பிரசவத்திற்குப் பிறகு பெரும்பாலான பெண்களுக்கு இயல்பு நிலையை அடையும் என்றாலும், பேறுகாலத்தின்போது அதிகரிக்கும் சர்க்கரையின் அளவு, பிறக்கும் குழந்தைகளுக்கு நாட்பட்ட பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனை அவதானித்து கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

டொக்டர் நல்ல பெருமாள்.

தொகுப்பு அனுஷா