(எம்.மனோசித்ரா)

அரசியல் அதிகாரம் தலையிட வேண்டிய இடங்களை இனங்கண்டு அதில் சம்பந்தப்படாது நாட்டின் எதிர்கால பயணத்திற்காக  திட்டங்களையும் கொள்கைகளையும் தயாரிக்கும் பொறுப்பு வியத்மக அமைப்பிற்கு உள்ளதென தெரிவித்துள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ , அரசாங்கத்தின் எதிர்கால பயணத்திற்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை எத்துல் கோட்டையில் உள்ள வியத்மக அலுவலகத்தில் உறுப்பினர்களை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது :

கிராமங்கள் மற்றும் நகரங்கள் உள்ளடங்களாக அனைத்து மக்களையும் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமையை வழங்கி இராஜாங்க அமைச்சுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் நோக்கங்களை வெற்றிகொள்வதற்கு பங்களிக்கக்கூடிய வழிவகைகள் குறித்தும் ஜனாதிபதி வியத்மக நிறைவேற்றுச் சபைக்கு தெளிவுபடுத்தினார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,' உப குழுக்களை அமைத்து முன்மொழிவுகள் மற்றும் திட்டங்களை முன்வைத்து இராஜாங்க அமைச்சுக்களின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு  வழி காட்டவும்  அமைச்சரின் முன்னுள்ள சவாலான சந்தர்ப்பங்களின் போது ஆலோசனைகளை வழங்கி உதவுவதற்கும் முடியும். அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் சுற்றாடலை பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கப்படுவது உறுதி செய்யப்படவேண்டும் என்றார்.

வியத்மக  நிறைவேற்றுச் சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை  அமைப்பின் செயற்குழு உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி, பிரதேச மட்டத்தில் கொள்கை வகுப்பதில் பங்களிக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்தும் சுட்டிக்காட்டினார். பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் புதிய உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.